தனி வழி, தனித்துவப் பயணம்

தனி வழி, தனித்துவப் பயணம்

3 mins read
ab7a7b6c-1d25-4a45-8523-9c05e02c84fe
-
multi-img1 of 2

தடைகளை உடைத்து சரித்திரம் படைக்கும் டாக்டர் ஷாலினி

'சிங்கை மகளிரைக் கொண்டாடுவோம்' எனும் இயக்கத்தை இவ்வாண்டு சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு அறிமுகப் படுத்தியது.

இவ்வியக்கம் சிங்கப்பூரின் நிர்மாணத்தில் கடந்த காலத்திலும் இப்போதும் பெண்கள் ஆற்றிவரும் பங்கினைக் கெளரவித்து, சிங்கப்பூர் மகளிரைக் கொண்டாடுகிறது.

அவ்வரிசையில், தனித்துவமிக்க துறைகளில் முத்திரை பதித்து வரும் இரு பெண்கள் தங்களது பயணம் குறித்து பகிர்ந்து கொள்கின்றனர்.

ப. பாலசுப்பிரமணியம்

ஒருவரைப் பார்த்து அவரைப் போலவே ஆக விரும்புவர் பலர். ஆனால், தமக்கென ஒரு பாதையை வகுத்து அதன் வழியே செல்ல விரும்புவோர் சிலர்தான். அவ்வகையில், டாக்டர் அருளானந்தம் ‌‌‌ஷாலினி, 42, இரண்டாவது ரகம்.

கடந்த 1998ஆம் ஆண்டில் மருத்துவத் துறையில் பயில சிங்கப்பூர் ஆயுதப் படையின் உபகாரச் சம்பளத்தைப் பெற்ற முதல் பெண் இவர்.

ஆண்கள் நிறைந்த இடத்தில் எப்படி ஒரு பெண்ணாக சமாளிக்கப் போகிறோம் என்ற சிந்தனைக்ேக இவர் இடமளிக்க வில்லை.

ஏனெனில், அடிப்படை ராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து, அதிகாரி பயிற்சிப் பள்ளியில் பயிற்றுவிக்கும் சிறந்த அதிகாரி எனப் பெயர் எடுத்தவர் இவர்.

அது மட்டுமின்றி, மருத்துவ அதிகாரிகள் பயிற்சிப் பள்ளியில் ஆக சிறப்பாகப் பயிற்சியை முடித்த அதிகாரி களுக்கு வழங்கப்படும் கெளரவ வாள் விருதையும் இந்த வீராங்கனை பெற்றிருந்தார்.

சிங்கப்பூர் கடற்படையிலும் தற்காப்பு அமைச்சிலும் சில ஆண்டுகள் சேவையாற்றி வெளிநாட்டுப் பயிற்சிகளிலும் ஈடுபட்டார்.

மருத்துவக் கல்வியில் முதுநிலைப் பட்டம் பெற்று காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை மருத்துவராக சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் பணியாற்றி வரும் இவர், 2018ஆம் ஆண்டில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் முதல் பெண் தலைமை மருத்துவ அதிகாரியாக பொறுப்பு வகிக்கத் தொடங்கினார்.

அவசர மருத்துவ சிகிச்சை வாகனச் சேவைகள் தொடர்பான நடைமுறைகளையும் வரைமுறைகளையும் நிர்வகிக்கும் பொறுப்பும் இவர் கையில்.

தாம் கர்னல் பதவி வகித்தாலும் மரியாதை என்பது பிறரிடம் உண்மையாக நடந்துகொள்வதில் தான் உள்ளது என வலியுறுத்திக் கூறும் டாக்டர் ‌‌‌ஷாலினி, "மக்களும் சேவையாளர்களும் பயன் பெறும் விதத்தில் கொள்கைகளைச் செயல் படுத்துவதில் அது வெளிப்படும்," என்கிறார்.

கடந்த ஆண்டு கொவிட்-19 பரவல் சிங்கப்பூரைப் பாதித்தபோது அக்கிருமி பற்றி போதிய விவரம் இல்லாதது பெரும் சவாலாக விளங்கியது.

இருப்பினும், சேவையாளர்களுக்கும் மக்களுக்கும் அது பரவிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த டாக்டர் ‌‌‌ஷாலினி, எல்லா அவசர மருத்துவச் சேவையாளர்களும் தனிநபர் பாதுகாப்பு சாதனைங்களை அணிந்து செயல்பட வழிவகுத்தார்.

பெரிய அளவிலான கொவிட்-19 பரிசோதனைகளை வழிநடத்தவும் பாதுகாப்புச் சாதனங்களை முறையாக அணிந்து கிருமித்தொற்றினால் பாதிப்படைந்த இடங்களை முறையாகச் சுத்தம் செய்யும் வழிமுறைகளையும் சேவை துறையினரிடம் பகிர்ந்துகொள்ளும் பொறுப்பும் படையினருக்கு இருந்தது.

இதற்காக அயராது இதர அமைச்சுகளுடனும் அமைப்புகளுடனும் ஒருங்கிணைந்து பணியாற்றும் முயற்சிகளில் ஈடுபட்ட டாக்டர் ‌‌‌ஷாலினி, தமது மூன்று இளம் குழந்தைகளைப் பராமரித்து வந்ததுடன் கடந்த ஆண்டில் தேசிய பல்கலைக்கழகத்தில் வர்த்தகப் படிப்பில் முதுநிலைப் பட்டமும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இவை சாத்தியமாக, ஆண்களுக்கும் பங்குண்டு என்று கூறுகிறார் டாக்டர் ‌‌‌ஷாலினி.

டான் டோக் செங் மருத்துவமனை அறுவை சிகிச்சை மருத்துவரான இவரின் கணவர் டாக்டர் ஸ்ரீதரன், மனைவி டாக்டர் ஷாலினி இரவுக் கல்வி வகுப்புகளுக்குச் செல்லும்போது, பிள்ளைகளான 11 வயது ஆகா‌ஷ், 9 வயது அ‌ஷ்மித்தா, 7 வயது அஜெய் ஆகியோருக்குப் பாடங்களில் ஏற்படும் ஐயங்களைத் தீர்த்து வைக்கும் ஆசானாகிவிடுவார். மனைவியின் முன்னேற்றத்திற்கு அவர் பக்கபலம்.

இலங்கையில் எளிய பின்னணியில் பிறந்து, பட்டப்படிப்பு வரை பயின்று, சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பல்லாண்டு காலம் விரிவுரை யாளராகச் சேவையாற்றிய தம் 80 வயது தந்தை திரு சூசைபிள்ளை அருளானந்தம், எதைச் செய்தாலும் அதைச் சிறப்பாகச் செய்யவேண்டும் எனும் தாரக மந்திரத்தை ஷாலினியின் மனதில் ஆழப் பதிய வைத்துள்ளார்.

உடன் பணியாற்றிய ஆண் மேலதிகாரிகளும் தம்மீது அதிக நம்பிக்கை கொண்டு, முக்கிய பொறுப்பு களைக் கொடுத்ததும் தமது முன்னேற்றத்திற்கு வழிவகுத்ததாக டாக்டர் ஷாலினி சொல்கிறார்.

"முன்னேற்றப் பாதையில் செல்லும்போது உங்களையே நீங்கள் குறைத்து மதிப்பிடாதீர்கள். எந்தச் செயலையும் செய்யமுடியாது என எண்ணாதீர்கள். எல்லாப் பொறுப்புகளையும் சமாளிப்பது எப்படி எனச் சிந்தனை செய்ய சிறிது நேரம் எடுத்துக்கொள்ளலாம். பிறரோடு உங்களை ஒப்பிடுவதைத் தவிர்க்கவும். மனம் சமநிலையை எட்டியதும் முன்நோக்கிச் செல்லுங்கள், உங்கள் பாதையை நீங்கள் கண்டறிவீர்கள்," என்று சக பெண்களுக்கு அறிவுரை சொல்கிறார் சாதிக்கப் பிறந்த டாக்டர் ‌‌‌ஷாலினி.