சிறு வயதிலிருந்தே சித்தி சவ்ரின் ஃபாரா தம் பாட்டியுடனும் தந்தையுடனும் அவர்களது மருத்துவப் பரிசோதனைகளுக்காக மருத்துவ மனைக்குக் கூடவே செல்வது வழக்கம்.
மருத்துவச் சூழல் இவருக்குப் பழக்கமான ஒன்றாகும்.
அவ்விடத்தின் செயல்பாடுகளையும் மருத்துவ ஊழியர்களையும் பார்த்து வளர்ந்த ஃபாரா, தாமும் எதிர்காலத்தில் அத்துறையில் நுழைய வேண்டும் என விரும்பினார்.
உயர்நிலைப் பள்ளியில் பயின்றபோது, இவரின் 70 வயது பாட்டி தொண்டை புற்றுநோய் காரணமாக இறந்துபோனார்.
இதனால், மனதளவில் பாதிப்படைந் தார் ஃபாரா. அதற்குக் காரணம் பாட்டி இவருக்கு மிகவும் நெருக்கமானவர்.
அதற்கு அடுத்த ஆண்டில் 'ஓ' நிலைத் தேர்வுக்காகத் தயார்செய்து கொண்டு இருந்த வேளையில், ஃபாராவின் தந்தை திரு ஜாகிர் ஹுசேன் இதயப் பிரச்சினைகளுக்காக சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
'ஓ' நிலைத் தேர்வுக்கு முந்திய இறுதிப் பள்ளித் தேர்வு சமயத்தில் இதுபோல் நடந்ததால் படிப்பில் கவனம் குன்றியது.
ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்து, தந்தை யைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்ற ஃபாரா, அங்கேயே படித்து, இரவு உணவும் உண்டுவிட்டு வீடு திரும்பும் நிலைமை இருந்தது.
ஒருமுறை தந்தையின் இரத்த அழுத்தம் துரிதகதியில் இறக்கம் கண்டது.
மருத்துவர்களும் தாதியர்களும் விரைந்து செயல்பட்ட காட்சிகள், ஏதாவது நாம் எதிர்பாராதது நடந்து விடுமோ என்ற பயத்தை ஃபாராவுக்குள் ஏற்படுத்தியது.
நிலைமையைப் புரிந்துகொண்டு ஃபாராவை பக்கத்து அறைக்கு அழைத்துச்சென்றார் அவரின் தந்தையைப் பராமரித்து வந்த தாதி.
அழுதுகொண்டிருந்த ஃபாராவை அரவணைத்து, தைரியம் கொடுத்து, அவருடைய அம்மாவும் அண்ணனும் வரும்வரை ஆதரவாக இருந்தார் அத்தாதி.
இருந்தபோதும், மருத்துவ சிகிச்சைகள் பலனின்றி, இதயம் செயலிழந்ததால் 51 வயதில் ஃபாராவின் தந்தை உயிரிழந்தார்.
தேக்கா சந்தையில் அமைந்துள்ள தந்தையின் இறைச்சிக் கடை வியாபாரத்தை நம்பி குடும்ப வருமானம் இருந்த நிலையில், தம் தாயார் எவ்வாறு பிரச்சினைகளை சமாளிக்கப் போகிறார் என்பதே ஃபாராவின் சிந்தனையில் நாளும் ஓடிக்ெகாண்டிருந்தது.
அப்போது, 'ஒ' நிலைத் தேர்விற்கு இன்னும் ஒரு மாதமே இருக்க, ஆசிரியர் ஒருவர் ஃபாராவைத் தாதிமை உபகாரச் சம்பளத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஊக்குவித்தார்.
அம்மாவின் பாரத்தைப் போக்கி, தமக்கு ஆறுதல் கூறிய தாதியர்போல, தானும் பிறருக்கு ஆதரவாக விளங்கவேண்டும் என்ற இலக்குடன் அத்திட்டத்திற்கு விண்ணப்பித்த ஃபாரா, அது கிடைத்திட வேண்டும் என்ற முனைப்புடன் படிப்பில் முழுக் கவனம் செலுத்தினார்.
அதற்குப் பலனாக உபகாரச் சம்பளமும் கிடைக்கவே, நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் சுகாதார அறிவியல் (தாதிமை) பட்டயக்கல்வியை மேற்கொண்டார் ஃபாரா.
இன்று இவர் சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகமும் கிளாஸ்கோ பல்கலைக்கழகமும் இணைந்து வழங்கும் தாதிமைத் துறை பட்டப்படிப்பை மேற்கொண்டு வருவதோடு, அடுத்தாண்டு பட்டப்படிப்பு முடிந்ததும் தேசிய இதய நிலையத்தில் பணியாற்ற உள்ளார்.
இவையெல்லாம் சாத்தியமாவதற்கு பலரும் இவருக்குப் பக்கபலமாக இருந்தனர்.
எடுத்துக்காட்டாக, தொடக்கத்தில் உபகாரச் சம்பளத்திற்கு விண்ணப்பிக்கலாமா என்ற ஐயம் குடும்பத்தினரிடையே நிலவ, உறவினர் திரு ஃபாருக், அது ஃபாராவிற்குப் பிடித்திருந்தால் தைரியமாக விண்ணப்பிக்குமாறு அறிவுரை கூறினார்.
தமது கதையைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று எண்ணி, ஈராண்டுகளுக்கு முன் சிங்கப்பூர் இந்திய வர்த்தக தொழிற்சபையின் மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் நடந்த சிறந்த மகளிர் போட்டியில் ஃபாரா பங்குபெற்று இளம் சாதனையாளர் விருதையும் வென்றார்.
தாதிமைத் துறையில் பேரார்வம் கொண்டுள்ள ஃபாரா, கடந்தாண்டு கொவிட்-19 கிருமித்தொற்று சமயத்தில், துணைச் சுகாதார ஊழியராக சிங்கப்பூர் எக்ஸ்போவில் அமைக்கப்பட்ட தற்காலிக கொவிட்-19 பராமரிப்பு நிலையத்தில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவினார்.
"என் முன்னேற்றத்திற்கு பாய லேபார் மெத்தடிஸ்ட் பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், நெருங்கிய தோழிகள் எனப் பலரும் காரணமாக விளங்கினர்.
"பெண்கள் தைரியமாக முடிவெடுத்து, தன்னம்பிக்கை யுடன் செயல்படும் போக்கை வளர்ப்பதே என் விருப்பம். நம் திறமை மேல் நமக்கே சந்தேகம் வருவதைத் தவிர்க்க வேண்டும்.
"தங்களது இலக்கை எட்ட பெண்கள் ஒருவருக்கொருவர் ஆதரவு தெரிவித்து உற்சாகப்படுத்திக்கொள்ள வேண்டும்," என்று 21 வயது இளையரான ஃபாரா கூறினார்.
தற்போது இவர் தாதிமைத் துறை சார்ந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, இளம்பெண்கள் அத்துறையில் சேர்வதற்கு ஊக்கமூட்டி வருகிறார்.

