தன்னாட்சி பல்கலைக்கழகங்கள், பலதுறை தொழிற்கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த இந்த ஆண்டு பட்டப்படிப்பு மாணவர்கள், அடுத்த மாதம் முதல் அவர்களுடைய முன்னாள் மாணவர்கள் போதிக்கும் நான்கு இலவச கல்வி மற்றும் பயிற்சிப் படிப்புகளில் கலந்துகொள்ளலாம்.
கல்வி அமைச்சு நேற்று இதனை அறிவித்தது.
பட்டதாரிகள் தங்களுடைய தேர்ச்சிகளை பலமுனைப் படுத்திக் கொள்ளவும் பொருளியல் நிச்சயமில்லாத நிலையில் பல துறைகளிலும் அவர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்க வழி செய்யவும் இந்த முயற்சி இடம் பெறுவதாக அமைச்சு கூறியது.
இந்த ஆண்டின் 16,000க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பட்டதாரிகளும் தொழில்நுட்பக் கல்விக்கழகம் மற்றும் பலதுறை தொழிற்கல்லூரிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 45,000 பட்டதாரிகளும் இணையம் மூலம் அல்லது நேரடியாக நடத்தப்படும் பல பாடங்களில் தங்களுக்குத் தோதானவற்றைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.
2021ல் முழுநேர தேசிய சேவையை நிறைவு செய்யும் முன்னாள் மாணவர்களும் இதற்கு தகுதி பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

