பன்னிரண்டு வயதுக்கும் அதற்கும் மேற்பட்ட சுமார் 400,000 மாணவர்களுக்கு, தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைப்பு விடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறிப்பாக, வழக்கநிலை, சாதாரண நிலை, மேல்நிலை தேர்வு எழுதும் மாணவர்களும் அதற்கு ஒப்பான தேர்வுகள் எழுதும் மாணவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முதலில் அழைக்கப்படுவார்கள்.
மாணவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு இன்று 1ம் தேதியிலிருந்து பதிந்துகொள்ளலாம்.
வரும் 3ம் தேதியிலிருந்து தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள முடியும்.
பிரதமர் திரு லீ சியன் லூங் நேற்று தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் மாணவர்களுக்கான தடுப்பூசி திட்டம் பற்றி முதலில் அறிவித்ததைத் தொடர்ந்து கல்வி அமைச்சு அது குறித்த மேல்விவரங்களை வெளியிட்டது.
அண்மைய கொவிட்-19 பரவலில் மாணவர்களுக்கு கிருமி தொற்றிய சம்பவங்கள் அதிகமானதைத் தொடர்ந்து அவர்களுக்கான தடுப்பூசி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாண்டு ஏப்ரல் 15லிருந்து இதுவரை பாலர்பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், உயர்கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் 70க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு கொவிட்-19 கிருமி தொற்றியுள்ளது.
கடந்த ஆண்டு இதைவிட குறைவான பிள்ளைகளையே கொவிட்-19 கிருமி தொற்றியது.
மாணவர்களுக்கு பெரும்பாலும் துணைப்பாட நிலையங்களிலும் பள்ளிகளிலும் கிருமி தொற்றியது. இதனைத் தொடர்ந்து மே மாத தொடக்கத்தில் பள்ளிகள் வீட்டிலிருந்தபடி வகுப்புகளை நடத்தும் முறைக்கு மாறின.
"பிள்ளைகளுக்கு மோசமான பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும் பெற்றோர் கவலைப்பட்டனர். அதனால் மாணவர்களுக்குத் தடுப்பூசி போட ஜூன் மாத விடுமுறையைப் பயன்படுத்திக் கொள்ள இருக்கிறோம்," என்று பிரதமர் லீ தமது தொலைக்காட்சி உரையில் கூறினார்.
முதலில், இவ்வாண்டு பிற்பகுதி யில் வழக்கநிலை, சாதாரண நிலை, மேல்நிலை போன்ற முக்கிய தேர்வுகளை எழுதவுள்ள சுமார் 56,000 மாணவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்படும்.
தேசிய தேர்வுகள் வரவிருப்பதால், தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளும் தேதியையும் நேரத்தையும் குறித்துக்கொள்வதில் மாணவர்களுக்கு அதிக நீக்குப்போக்கு கிடைப்பதே அதன் நோக்கம் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.
அடுத்த இரண்டு வாரங்களில் படிப்படியாக, மற்ற முழுநேர மாணவர்களும் தடுப்புசி போட்டுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.
மதரஸாக்கள், சிறப்புத் தேவையுள்ளவர்களுக்கான பள்ளிகள், ஹுவா சோங், ஆங்கிலோ சீனப் பள்ளி, செயிண்ட் ஜோசஃப் பள்ளி போன்றவற்றின் அனைத்துலகப் பிரிவுகளில் உள்ள மாணவர்கள் அவர்களில் அடங்குவார்கள்.
பெரும்பான்மையான மாணவர்கள் தடுப்பூசிக்கான தேசிய பதிவு முறை இணையத்தளத்தில் சென்று பதிந்துகொள்ளலாம். அது குறித்து பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
பதினெட்டு வயதுக்கு குறைவானவர்களுக்கு ஃபைசர்
18 வயதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஃபைசர் அல்லது மொடர்னா தடுப்பூசி இரண்டில் ஒன்றைப் போட்டுக் கொள்ள தேர்வு செய்யலாம். ஆனால் 12 முதல் 17 வயதிலான மாணவர்கள் ஃபைசர் தடுப்பூசியை மட்டும் தான் பெற முடியும்.
மொடர்னா தடுப்பூசியை 18 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகளுக்குச் செலுத்த இன்னும் அனுமதி இல்லை என்பதே அதற்குக் காரணம்.
பன்னிரண்டு முதல் 17 வயதுள்ள பிள்ளைகளுக்கு ஃபைசர் தடுப்பூசி பாதுகாப்பானது என்று சுகாதார அமைச்சின் மருத்துவ இயக்குநர் டாக்டர் கென்னத் மாக் தெரிவித்தார்.
இதற்கிடையே மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு நான்கு நிலையங்கள் அமைக்கப்படும். அங் மோ கியோ, சுவா சூ காங், சீமெய் தொழில்கல்வி நிலைய வளாகங்களிலும் ராஃபிள்ஸ் மாநாட்டு நிலையத்திலும் அவை அமைந்திருக்கும்.

