சிங்கப்பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி புதிதாக 23 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 16 பேருக்கு சமூக அளவில் தொற்று உறுதியானது. வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் புதிதாக எவருக்கும் தொற்று பதிவாகவில்லை.
சமூகத்தில் தொற்று உறுதிப் படுத்தப்பட்டோரில் 13 பேர், முன்னதாக தொற்று உறுதி செய்யப்பட்டோருடன் தொடர்புள்ளவர்கள். எஞ்சிய மூவருக்கு முன்பு கிருமி தொற்றியோருடன் தொடர்பில்லை.
முன்னதாக தொற்று உறுதி செய்யப்பட்டோருடன் தொடர்புடையவர்களில் 11 பேர் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த ஏழு பேருக்குத் தொற்று உறுதியானது. அவர்களுக்கு வீட்டிலிருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அவர்களில் நால்வர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்.
சிங்கப்பூரில் இதுவரை கிருமிதொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கை 62,051 ஆகும்.
இவ்வேளையில் கிருமித் தொற்றால் 95 வயது சிங்கப்பூர் மாது உயிரிழந்தார். சாங்கி விமான நிலையத்தின் மூன்றாம் முனையக் கிருமித் தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையவர் அவர்.

