தற்காலிக கொவிட்-19 மானியம் $700; ஜூன் 3 விண்ணப்பம்

தற்காலிக கொவிட்-19 மானியம் $700; ஜூன் 3 விண்ணப்பம்

2 mins read

கொவிட்-19 மீட்சி தற்­கா­லிக மானி­யத்­திற்­கான (சிஆர்ஜி-டி) விண்­ணப்­பங்­கள் ஜூன் 3ஆம் தேதி தொடங்கி ஒரு மாதம் கழித்து ஜூலை 2 ஆம் தேதி முடி­வ­டை­யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக பாதிக்­கப்­பட்டு உள்ள குறைந்த வருாய் மற்­றும் நடுத்­தர வரு­வாய் குடும்­பத்தினருக்கு உத­வு­வ­தற்­காக இந்­தத் தற்­கா­லிக மானி­யம் இடம்­பெறு­கிறது.

மே 16ஆம்­ தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதிவரை சம்­ப­ளம் இல்­லாத விடுப்­பில் அனுப்­பப்­பட்ட தகுதி உள்ள ஊழி­யர்­கள் அல்­லது இதே கால­கட்­டத்­தில் குறைந்தபட்­சம் ஒரு மாதத்­தில் பாதி வரு­வாயை இழந்து இருக்­கும் ஊழி­யர்­கள் இந்த மானி­யத்­தைப் பெற விண்­ணப்பிக்­க­லாம். தகுதி உள்­ள­வர்­க­ளுக்கு $700 தொகை கிடைக்­கும். தற்­கா­லிக மானி­யம், இப்போது நடப்­பில் இருக்­கும் கொவிட்-19 மீட்சி மானி­யத்­திற்கு உறு­து­ணை­யாக இடம்­பெ­று­கிறது.

நடப்­பில் இருக்­கின்ற மானி­யம் ஜன­வரி 18ஆம் தேதி தொடங்­கப்­பட்­டது. இது தொற்று கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டுள்ள குறைந்த வருவாய் மற்­றும் நடுத்­தர வரு­வாய் குடும்­பத்தினருக்­கும் சுய­மாக வேலை பார்ப்­போ­ருக்­கும் உத­வு­கிறது. நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் தற்­கா­லிக மானி­யம் பற்றி கடந்த வெள்­ளிக்­கி­ழமை கூறினார்.

இந்த இரண்டு வகை மானி­யங்­க­ளுக்­கும் தகுதி பெறு­வ­தற்­கான நிபந்­த­னை­கள் ஒரே மாதி­ரி­யா­னவை என்­றா­லும் தற்­கா­லிக நிதி உத­வி­யைப் பெறு­வ­தற்­கான நிபத்­னை­களில் இரண்டு வேறு­பாடு­கள் உள்­ளன. இதைப் பெறு­வ­தற்கு மனு செய்­வோர் மே 16ஆம்­ தேதி முதல் ஜூன் 30ஆம் தேதிவரை குறைந்தபட்­சம் ஒரு மாதம் சம்­ப­ளம் இல்­லாத விடுப்­பில் அனுப்­பப்­பட்ட தகுதி உள்ள ஊழி­யர்­க­ளாக இருக்­க­வேண்­டும். அல்­லது இதே கால­கட்­டத்­தில் குறைந்தபட்­சம் ஒரு மாதத்­தில் பாதி வரு­வாயை இழந்துள்ள ஊழி­யர்­க­ளாக இருக்­க­வேண்­டும்.

தற்­கா­லிக மானி­யத்­தைப் பெறு­வ­தற்கு விண்­ணப்­பிக்­கும் போது வேலை தேடி­ய­தற்­கான அல்­லது பயிற்­சிக்­கான அத்­தாட்சி எதை­யும் தாக்­கல் செய்­ய­வேண்­டி­ய­தில்லை என்பது இரண்­டா­வது வேறு­பாடு. சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்­கை­யில் இதனை தெரி­வித்­தது.

தனிப்­பட்­ட­வர்­கள் ஒரே நேரத்­தில் இரண்­டை­யும் பெற முடி­யாது என்­றும் அமைச்சு குறிப்­பிட்­டது.

கொவிட்-19 வாகன ஓட்டுநர்­கள் நிவா­ரண நிதி போன்ற இதர கொவிட்-19 ஆத­ரவுத் திட்­டங்­க­ளின் மூலம் இப்­போது உதவி பெறு­வோ­ரும் தற்­கா­லிக மானி­யத்­திற்­குத் தகுதி பெற மாட்­டார்­கள்.

தற்காலிக மானியம் பற்றி நேற்று ஃபேஸ்புக்­கில் கருத்து தெரி­வித்த சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி, இந்தப் புதிய தற்­கா­லிக மானி­யம் முடி­யும்­போது, தொடர்ந்து உதவி தேவைப்­படும் ஊழி­யர்­கள் இப்­போது நடப்­பில் உள்ள மானி­யத்­தைப் பெறலாம் என்றார்.

டிசம்பர் 31 ஆம் தேதி வரை இதற்காக விண்ணப்பிக்கலாம்.