சிங்கப்பூரர்கள் பலரும் சுற்றலா செல்லவும் விமானங்களில் போகவும் ஹோட்டல்களில் தங்கவும் முன்பதிவு செய்து வைப்புத்தொகை அல்லது முன் பணம் செலுத்தி இருந்தார்கள்.
ஆனால் கொவிட்-19 காரண மாக அவற்றில் பலவும் ரத்து செய்யப்பட்டன. அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தாங்கள் செலுத்திய பணத்தைத் திரும்பப் பெற முடியவில்லை என்று கேஸ் எனப்படும் சிங்கப்பூர் பயனீட்டாளர்கள் சங்கத்திடம் புகார் தெரிவித்தனர்.
இந்தச் சங்கத்திற்குச் சென்ற ஆண்டு வந்த கொவிட்-19 தொடர்பான புகார்களில் இத்தகைய புகார்களே அதிகமாக இருந்தன.
உடற்பயிற்சிக் கூடங்கள், உடலுறுதி நிலையங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள், மருத்துவ நிறுவனங்கள், திருமண ஏற்பாடு தொடர்பான நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு எதிராக தாக்கலான புகார்களும் அதிகமிருந்தன.
சென்ற ஆண்டில் பெறப்பட்ட 18,335 புகார்களில் ஏழில் ஒன்று கொவிட்-19 தொடர்பானதாக இருந்ததாக கேஸ் அமைப்பு அறிக்கையில் தெரிவித்தது.
அவற்றில் பாதிப் புகார்கள், பயண, விமான நிறுவன தொழில்துறை தொடர்பானவை.
முன் பணத்தைப் பெற முடியாமல் போனது ஒருபுறம் இருக்க, பயணத்தை ஒத்திவைத்ததால் தண்டத்தொகை செலுத்த வேண்டும், நிர்வாகக் கட்டணத்தக் கொடுக்கவேண்டும் என்று சிலரிடம் தெரிவிக்கப்பட்டது.
கேஸ் அமைப்பபு புகார்களின் பேரில் செயல்பட்டது. பேச்சுவார்த்தை, சமரசம் மூலம் விமான நிறுவனங்கள், பயண முகவர்கள், பயண இணைய வாசல்கள் ஆகிய வற்றிடம் இருந்து $300,000க்கும் அதிக தொகை மீட்கப்பட்டது.

