சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்த காணொளிகள்

3 mins read
09b4a0d1-b0ed-4d8b-99b5-aa8f6d64ca88
-
multi-img1 of 2

மோஷா ஏழு மாத குட்டியாக இருந்தபோது தாய்லாந்து - மியன்மார் எல்லைப் பகுதியில் ஒரு காட்டில் தன்னுடைய அம்மாவுடன் சுற்றித் திரிந்து கொண்டிருந்தது.

மற்ற நாட்டிலிருந்து எதிரிகள் தங்கள் நாட்டிற்குள் நுழையக்கூடாது என்பதற்காக காட்டுப் பகுதிகளில் கண்ணிவெடிகளைப் புதைத்து வைப்பார்கள். அதைத் தெரியாமல் மிதித்துவிட்டால் வெடித்து உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

அதுபோல் வைக்கப்பட்டிருந்த ஒரு கண்ணிவெடியில் மோஷா காலை வைத்ததால் அந்த வெடி வெடித்து அது தனது வலது முன்னங்காலை இழந்து ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்தது. இச்சம்பவம் நடைபெறும்போது பாதிக்கப்பட்டது மோஷா மட்டுமல்ல. அதனுடன் சேர்த்து மொத்தம் 15 யானைகளும் பாதிக்கப்பட்டன. அவற்றின் சத்தத்தைக் கேட்டு அங்கு வந்தவர்கள் அவற்றைக் காப்பாற்ற முயன்றனர்.

ஆனால் அவற்றில் அதிர்ஷ்டசாலிகளான மோஷாவும் அதன் தோழி மோட்டேலாவும்தான் உயிர்தப்பின. சிகிச்சைக்குப் பிறகு மோஷா மூன்று கால்களுடன் நடக்கத் தொடங்கியது. ஆனால் மூன்று கால்களுடன் நடந்ததால் நாளுக்கு நாள் மோஷாவின் முதுகெலும்பும் கால் எலும்புகளும் வலுவிழக்கத் தொடங்கின.

மோஷா பாதிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய யானை நண்பர்கள் குழு நடத்தி வரும் யானைகள் மருத்துவமனையில் மோஷாவிற்கு செயற்கைக் கால் பொருத்தினர்.

அதன் பின்னர் யானை ஒவ்வொரு முறை எடை கூடும்போதும் எடையைத் தாங்கும் வகையில் கால்கள் மாற்றிப் பொருத்தப்பட்டன.

இந்த சம்பவம் நடந்தது 2016ல். அப்போது அது 600 கிலோ எடையுடன் இருந்தது. அதன் பின்னர் அதன் எடை அதிகரிக்கும்போது அதன் எடைக்கு ஏற்றவாறு ஒன்பது முறை கால்கள் மாற்றி பொருத்தப்பட்டன. தற்பொழுது அதன் எடை சுமார் 2000 கிலோ.

மோஷாவிற்கு மருத்துவப் பரிசோதனை செய்து வரும் எலும்பு மருத்துவர், தெர்ட்சாய், "யானை கால்கள் இல்லாமல் நடந்தபோது அதன் முதுகெலும்புகள் வளைய ஆரம்பித்தன. அப்படியே இருந்திருந்தால் மோஷா இந்நேரம் இறந்து போயிருக்கும்," என்றார். மோஷாவைக் காப்பாற்றியது இவர்கள் மட்டுமல்ல, பல நாடுகளிலிருந்து நன்கொடைகளை வழங்கிய விலங்கு ஆர்வலர்களும்தான்.

மோஷாவிற்கு செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டு ஆண்டுகள் பல ஆனாலும் அது நான்கு கால்களுடன் நடக்கும் காணொளி தற்பொழுது இணையத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதைப் பார்த்து விலங்கு ஆர்வலர்கள் பலரும் அந்தக் காணொளியைப் பகிர்ந்து வருகின்றனர்.

சென்ற மாதம் 28ஆம் தேதியன்று சமூக ஊடகத்தில் கழுகு மீன் ஒன்று வலையில் சிக்கியிருப்பது போன்ற காணொளி ஒன்று சமூக ஊடகத்தில் வெளியானது.

ஈஸ்ட் கோஸ்ட் பார்க் கடற்கரையில் பலர் மீன்பிடிப்பதைக் காணலாம். அப்படி மீன் பிடித்த ஒருவர் வீசிய தூண்டிலில் அந்த மீன் மாட்டிக்கொண்டது.

அதனை அவர் கரைக்கு கொண்டு வருவதுபோன்ற காணொளி வெளியானது. கழுகு இறக்கை விரித்துப் பறக்கும்போது எப்படி இருக்குமோ அதுபோல் அந்த மீன் இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

அதுபற்றி கருத்து தெரிவித்த சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் கடல் துறை உயிரியல் வல்லுநர் ஹுவாங் டான் வெய், "சிங்கப்பூரில் மூன்று கழுகு மீன் சிற்றினங்கள் உண்டு. இந்தக் காணொளியில் காணப்படும் மீன் அடிக்கடி தென்படும்," என்று கூறினார். இந்தக் காணொளியைப் பலரும் பார்த்து பகிர்ந்து வருகின்றனர்.