நெறிமுறை சார்ந்த விவகாரங்கள் நிலவினாலும் கொவிட்-19க்கு எதிரான புதிய தடுப்பூசிகளை உருவாக்கும் பணிகள் பாதிக்கப்படக்கூடாது.
கொவிட்-19 தடுப்பூசிகளை மேலும் விரைவாக, கூடுதல் செயல்திறனுடன் உருவாக்க புதிய தொழில்நுட்பத் தளங்கள் வேண்டும்.
சிங்கப்பூர் தொடர்ந்து அத்தளங்களுக்கு ஆதரவளிப்பதுடன் அவற்றின் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்றார் சுகாதார அமைச்சின் தலைமை சுகாதார அறிவியல் நிபுணர் பேராசிரியர் டான் சோர் சுவான்.
உயிரியல் நெறிமுறைகள் ஆலோசனைக் குழுவின் 20வது ஆண்டுவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இரண்டு நாள் மெய்நிகர் பொது மாநாட்டில் அவர் பேசியிருந்தார்.
புதிதாக உருவாக்கப்படும் தடுப்பூசிகள் தொடர்பில் நெறிமுறை சார்ந்த விவகாரங்கள் நிலவி வருகின்றன.
குறிப்பாக, பலன்தரும் பாதுகாப்பான தடுப்பூசிகள் நமக்குக் கிட்டும் நிலையில் புதிதாக உருவாக்கப்படும் தடுப்பூசிகளை மனிதர்கள் மீது சோதித்துப் பார்ப்பது தொடர்பில் அக்கறை ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், தடுப்பூசி உருவாக்கம் மிக முக்கியமானது. உருமாறிய கொரோனா கிருமிகளைச் சமாளிக்கவோ முதன்முதலில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கும் மேல் ஒரு படியாக பல கிருமிகளைச் சமாளிக்கவோ தடுப்பூசி உருவாக்கம் தேவை என்றார் பேராசிரியர் டான்.
"மனிதன் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும்போது நெறிமுறை விவகாரங்கள் முன்னிலைபெற்றுவிடுகின்றன.
"ஆனால் ஒழுங்கான கட்டுப்படுத்தப்பட்ட, விதிமுறைகளுக்கு உட்பட்ட நிலையில் இந்த ஆய்வுகள் நடக்க அனுமதிக்கப்பட வேண்டும்.
"அப்போதுதான் நமது அறிவை நாம் பெருக்கிக்கொண்டு இக்குறிப்பிட்ட கிருமியைச் சமாளிக்க மேலும் செயல்திறன் மிக்க வழிகளைக் கண்டறிய முடியும்," என்றார் அவர்.

