செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

அயோன் ஆர்ச்சர்ட் சென்ற

ஒருவருக்குக் கிருமித்தொற்று

அயோன் ஆர்ச்சர்ட் கடைத்தொகுதிக்குச் சென்றிருந்தவர்களில் 11,300க்கும் மேற்பட்டவர்கள், இலவச கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள முன்வந்தனர். முன்வந்தவர்களில் இதுவரை ஒருவருக்குக் கிருமித்தொற்று உறுதியாகியுள்ளது. அந்தக் கடைத்தொகுதியைச் சேர்ந்த ஊழியர்கள் பலருக்கு கொவிட்-19 கிருமி தொற்றியிருந்தது உறுதியானதால் இலவச பரிசோதனை செய்துகொள்ள வருகையாளர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.

கடைத்தொகுதியின் மொத்தம் 3,464 ஊழியர்களுக்கும் வருகையாளர்களுக்கும் கட்டாய கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் எவருக்கும் கிருமித்தொற்று இல்லை என்று உறுதியானது. அதையடுத்து 11,395 பேர் தாங்களே முன்வந்து பரிசோதனையைச் செய்துகொண்டதில் ஒருவருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும், 1,146 பேரின் கொவிட்-19 பரிசோதனை முடிவுகள் நேற்றைய நிலவரப்படி இன்னும் வெளியிடப்படவில்லை.

புக்கிட் மேரா வியூ உணவு நிலைய கிருமிக் குழுமத்தில் 39 பேர்

புக்கிட் மேரா வியூ உணவு நிலையத்தில் கண்டறியப்பட்ட கிருமித்தொற்றுக் குழுமம் தொடர்பில் மேலும் 14 பேருக்குத் தொற்று இருப்பதாக நேற்று முன்தினம் இரவு உறுதியான நிலையில் இதுவரை குழுமத்தில் 39 பேர் அடங்கியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் உணவு நிலையத்தில் வேலை செய்யும் கடை ஊழியர்களும் அவர்களுடன் ஒரே வீட்டில் வசிப்போரும் ஆவர். இதற்கிடையே, நன்கு சுத்தம் செய்து தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக இம்மாதம் 26ஆம் தேதிவரை உணவு நிலையம் மூடப்பட்டிருக்கும் என்று சுகாதார அமைச்சு முன்னதாக கூறியிருந்தது. கிருமித்தொற்று பதிவாகியுள்ள காரணத்தால் தெலுக் பிளாங்கா டிரைவ் உணவு நிலையமும் இதேபோல் மூடப்பட்டுள்ளது. தற்போது சிங்கப்பூரில் 44 கிருமித்தொற்றுக் குழுமங்கள் உள்ளன.

இந்நிலையில் புதன்கிழமையன்று உறுதிசெய்யப்பட்ட புதிய கிருமித்தொற்று சம்பவங்களில் 16 பேரின் தொடர்புகள் கண்டறியப்பட்டது. மூவரது தொடர்புகள் இன்னும் கண்டறியப்படாத நிலையில் உள்ளது. அவர்களில் ஒருவர் 85 வயது சிங்கப்பூரர் ஆவார். ஓய்வுபெற்ற அந்த மூதாட்டி, சனிக்கிழமை காய்ச்சலால் பாதிக்கப்பட்டும் செவ்வாய்க்கிழமை அன்றுதான் மருத்துவரைச் சென்று பார்த்ததாகக் கூறப்பட்டது.

உத்திபூர்வ ஒருங்கிணைப்பை வலுவாக்கும் புதிய தொடர்புகள்

ஆசியானின் அமைச்சர்-நிலை அவசர அழைப்பு எண்ணை மேலும் எட்டு முக்கிய பங்காளி நாடுகள் பயன்படுத்தலாம் என்ற அறிவிப்பு, நேற்று முன்தினம் நடைபெற்ற எட்டாவது ஆசியான் தற்காப்பு அமைச்சர்களின் சந்திப்பில் வரவேற்கப்பட்டது. பங்காளி நாடுகளில் அமெரிக்காவும் சீனாவும் அடங்கும். அத்துடன் பாதுகாப்புச் சவால்களுக்கிடையே வட்டார அளவில் அமைதி, திடநிலை ஆகியவை நிலவ, ஒன்றுபட்ட கடப்பாடு கொண்டுள்ளதையும் பத்து ஆசியான் நாடுகளும் அவற்றின் எட்டு பங்காளி நாடுகளும் சந்திப்பின்போது மறுஉறுதிப்படுத்தின.