மின்னிலக்கமயமாவது உணவுக் கடைக்காரர்களுக்குப் பெரும் சவால் விடுத்து வரும் நிலையில், அவர்களுக்குக் கைகொடுப்பதற்காக புதிய பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பணிக்குழு அதன் முதல் கலந்துரையாடலை நேற்று நடத்தியது.
உணவு விநியோகத் தளங்களின் உதவியுடன் கடைக்காரர்கள் தங்களின் வியாபாரத்தை நீடித்து நிலைத்திருக்கக்கூடியதாக உறுதிசெய்வதே பணிக்குழுவின் நோக்கமாகும்.
கடைக்காரர்கள் சந்திக்கும் சவால்களுக்கு ஏற்ற தீர்வுகளைக் காண, மூன்று முக்கிய அம்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இணையத் தளங்களை உணவுக் கடைக்காரர்கள் பயன்படுத்த கற்றுத் தருவதுடன் தகுந்த ஆதரவளிப்பது மூன்று தீர்வுகளில் ஒன்றாகும்.
விநியோகத் தளங்களுக்காக நீடித்து நிலைக்கக்கூடிய வர்த்தகச் செயல்முறை ஒன்றை உருவாக்குவதும் ஓர் தீர்வு.
உணவங்காடிச் சாப்பாட்டுக்கான இணைய விநியோகத் தேவையை அதிகப்படுத்துவது மூன்றாவது தீர்வாகும்.
இப்பணிக்குழுவின் பங்காளிகளாக பத்து உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். 'ஃபூட்பேண்டா', 'வைகியூ', 'டிலிவரூ', 'கிராப்' போன்ற உணவு விநியோளத் தளங்கள் இவற்றில் அடங்கும்.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சும் தொடர்பு, தகவல் அமைச்சும் இணைந்து பணிக்குழுவை வழிநடத்தும்.
இணையக் கலந்துரையாடல் பயனுள்ளதாக அமைந்ததாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் செய்தியாளர்களிடம் நேற்று கூறினார்.
தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தவராக இல்லாதது, இணையத்திலும் நேரடியாகவும் உணவை நாடும் வாடிக்கையாளர்களைச் சமாளிக்கச் சிரமப்படுவது, தங்களின் உணவு வகைகளை இணையத்தில் விளம்பரப்படுத்த அறிந்திராமல் இருப்பது போன்றவை உணவுக் கடைக்காரர்கள் சந்திக்கும் சவால்கள் என்று டாக்டர் கோர் குறிப்பிட்டார்.
கொள்ளைநோய்க்குப் பின்னரும் இணையம் வழி உணவு விநியோகச் சேவையை நாடும் போக்கு தொடரும் என்று வலியுறுத்திய அமைச்சர், மின்னிலக்கத் தளங்களைப் பயன்படுத்திக்கொள்ள கடைக்காரர்களுக்கு ஆதரவளிப்பதில் தேவை எழுந்துள்ளது என்றார். இந்த ஆதரவால் அவர்களின் வியாபாரம் பெருகுவதுடன் வாடிக்கையாளர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்றார் அவர்.

