கொரோனா நோய்த் தொற்று காரணமாக பலர் வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இந்த சிறுமிகள் உடற்பயிற்சி அவசியம் என்பதை உணர்ந்தவர்கள். அதனால் தினமும் பள்ளிப் பாடங்களைக் கற்பதுடன் உடற்பயிற்சிக்கும் நேரத்தை ஒதுக்கி, இருவரும் போட்டி போட்டுக்கொண்டு பல நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.
'காலம் பொன்னானது' என்று ஒரு பழமொழி உண்டு. பொன் போனால் சம்பாதித்து விடலாம். 'காலம் உயிர் போன்றது'. உயிர் போனால் வராது என்பார் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள்.
அதை உணர்ந்து திருமதி உமாமகேஸ்வரி தன்னுடைய இரண்டு மகள்களையும் காலத்தை வீணாக்காமல் பயனுள்ள பல நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வருகிறார்.
யாஷிக்ஹா சொங்சாங் தொடக்கப்பள்ளியில் தொடக்கநிலை நான்கில் படிக்கிறார். இவருடைய தங்கை ருத்திக்ஹா கேஸ்வரீனா தொடக்கநிலை 2 மாணவி.
இவர்கள் இருவரும் இந்தக் கொரோனா காலகட்டத்தில் வீட்டிலேயே அடைந்து இருக்காமல் தங்களுக்கு விருப்பமான பொழுதுபோக்குகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இருவரும் தினமும் மாலை நேரத்தில் வீட்டிற்கு அருகில் இருக்கும் பூங்காவில் 'ரோலர் ஸ்கேட்டிங்' விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடன் அவர்களது தாயார் திருமதி உமாமகேஸ்வரியும் செல்வார். இவர் தகவல் தொழில் நுட்பத் துறையில் பணியாற்றுகிறார்.
அவர்களின் நடவடிக்கைகளைப் பற்றி உமாமகேஸ்வரி கூறுகையில், "மூத்தவர் யாஷிக்ஹா முறையாக 'ரோலர் ஸ்கேட்டிங்' விளையாடக் கற்றுக்கொண்டார். அவரைப் பார்த்து அவருடைய தங்கை ருத்திக்ஹா சொந்தமாக விளையாடக் கற்றுக்கொண்டார்.
"இந்த விடுமுறை நாட்களில் சகோதரிகள் தொலைக்காட்சி, மடிக்கணினி, கைத்தொலைபேசிகளில் தங்கள் பொழுதுகளைக் கழிக்காமல் 'ரோலர் ஸ்கேட்டிங்', உந்துவண்டி ஓட்டுவது, நீச்சல் பழகுவது, இசை கற்றுக்கொள்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
"நாங்கள் அடிக்கடி தெம்பனிஸ் நூலகத்திற்குச் செல்வோம். அங்கே எங்களுக்கு விருப்பமான தமிழ், ஆங்கிலப் புத்தகங்களை இரவல் வாங்கி வருவோம். யார் முதலில் படித்து முடிப்பது என்று போட்டி போட்டுக்கொண்டு இருவரும் புத்தகத்தைப் படித்து முடிப்போம். மீண்டும் பள்ளிக்குச் செல்லும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறோம்," என்றார் மூத்தவரான யாஷிக்ஹா.
இந்தக் கொரோனா காலகட்டத்தில் சிறுவர்கள் வீட்டிற்குள் மின் சாதனங்களைப் பயன்படுத்திக்கொண்டு உட்கார்ந்த இடத்திலேயே நேரத்தைக் கழிக்கிறார்கள். உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.
"மின் சாதனங்களில் இருந்து வெளிவந்து உடற்பயிற்சியிலும் புத்தகங்கள் படிப்பதிலும் கவனம் செலுத்தினால் உடல் ஆரோக்கியம் பெறுவதுடன் பொது அறிவும் தன்னால் வந்து சேரும்," என்றார் சிறுமிகளின் தாய் உமாமகேஸ்வரி.

