கொரோனா பயமின்றி சுற்றித் திரியும் யானைகள்

கொரோனா பயமின்றி சுற்றித் திரியும் யானைகள்

3 mins read
4bd8940d-e4ce-4db9-8d43-9d7d09cc7fe0
-
Google News Preferred Icon

மக்கள் கொரோனாவால் சுற்றுலாப் பயணங்கள் இன்றி வீட்டிற்குள் அடைந்து கிடக்க, 15 யானைகள் சுற்றுலா செல்வதுபோல் சுமார் 500 கி.மீட்டர் (311 மைல்கள்) தூரம் பயணம் செய்து, சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்ற ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி 16 ஆசிய யானைகள் சீனாவின் சிஸ்குஆங்பான்னா என்ற இடத்திலுள்ள இயற்கை சரணாலயத்தை விட்டுவிட்டு, புயர் என்ற நகரத்தை நோக்கிப் புறப்பட்டன.

ஒரு மாதத்திற்குப் பிறகு இரண்டு யானைகள் குட்டி போட்டன. அதில் ஒரு யானை அந்தக் கூட்டத்தை விட்டு வெளியேறியது. அதன்பின் 15 யானைகள் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தன.

வழியில் அவை யூஜி என்ற நகரத்தை அடைந்தன. அவற்றுக்கு பசி ஏற்பட்டதால் அந்த நகருக்குள் சென்று அங்கிருந்த குப்பைத் தொட்டிகளை உடைத்து, 60 ஹெக்டேர் நிலத்தை நாசம் செய்து, வீட்டிற்குள் தும்பிக்கையை நீட்டி உணவுகளை எடுத்து உண்டு, இப்படி ஊரையே நடுநடுங்க வைத்தன. அப்போதுதான் பலரும் அந்த யானைகளின் நடவடிக்கைகளைக் கவனிக்கத் தொடங்கினர்.

சீனாவில் யானைகளைத் துன்புறுத்தக்கூடாது என்று சட்டம் இருப்பதால் மக்கள் அவற்றைத் துரத்தி ஓடவிடாமல் தங்கள் வீடுகளை விட்டுவிட்டு பாதுகாப்புத் தேடி ஓடத் தொடங்கினர்.

யானைகள் பிறகு ஜின்னிங் மாவட்டத்தை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடர்ந்தன.

8 மில்லியன் மக்கள் வாழும் நகரை நோக்கி அவை நடைபோட, இதை இப்படியே விட்டால் மக்கள் பயத்தில் ஊரை விட்டு ஓடவேண்டிய நிலை ஏற்படும் என்று அதிகாரிகள் பயந்தனர். அதனால் 400 போலிசார், 76 போலிஸ் வாகனங்கள், 14 ட்ரோன் புகைப்படக்கருவிகளுடன் யானைக் கூட்டத்தைப் பின்தொடரத் தொடங்கினர்.

திருடர்கள் அல்லது கலகக்காரர்கள் என்றால் போலிசார் அடக்கி விடுவார்கள். ஆனால் யானைகளை அவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.

அவை உணவு தேடி நகரத்தை நாசம் செய்வதற்குள் அவற்றுக்கு வேண்டிய உணவுப் பொருட்களைக் கொடுத்துவிட்டால் அவை சாப்பிட்டுவிட்டுச் சென்றுவிடும் என்ற முடிவுக்கு வந்தனர் போலிசார்.

அதன்படி 18 டன் மக்காச்சோளம், அன்னாசிப்பழங்கள் முதலானவற்றை ஆங்காங்கே பெரிய பெரிய தொட்டிகளில் நிரப்பியதுடன் தண்ணீர் தொட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டன.

பல நாட்களாக சரியான உணவு இல்லாமல் அலைந்துகொண்டிருந்த இந்த யானைக்கூட்டத்திற்கு அங்கு வைக்கப்பட்டிருந்த உணவு தேவாமிர்தமாக இருந்தது. அவை அவற்றை மூச்சு முட்ட உண்டு, தண்ணீர் குடித்துவிட்டு காட்டை நோக்கிச் சென்றன.

காட்டில் அவை விருந்துண்ட களைப்பால் ஒன்றாக உறங்கத் தொடங்கின. குட்டிகளை நடுவில் படுக்க வைத்து சுற்றி பெரிய யானைகள் தூங்குவதை ட்ரோன் புகைப்படக் கருவிகள் படமெடுத்து வெளியிட்டன. அவை ஓய்வெடுக்கும் காட்சி தற்போது உலகளவில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குடும்பத்தோடு ஓய்வெடுக்கும் புகைப்படங்களும் காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கானோரால் பகிரப்பட்டு வருகிறது.

தற்பொழுது சீன தொலைக்காட்சிகள் இந்த யானைகளின் நடவடிக்கைகளை 24 மணி நேரமும் ஒளிபரப்புகின்றன. ஊரைச் சுற்றி சுற்றுலா செல்லும் இந்த யானைகளை சுற்றுலா செல்ல முடியாமல் வீட்டில் அடங்கிக் கிடக்கும் மனிதர்கள் கண்டு களித்து வருகிறார்கள்.

இவை இவ்வாறு வழிதவறி சென்றதற்கு காரணம்தான் என்ன என்று யாருக்கும் புரியவில்லை. சென் மிங்யோங் என்னும் பேராசிரியர் "இந்த யானைக் கூட்டத்திற்குப் புதிதாக ஒரு பெண் யானை தலைமையேற்று, அதற்குப் போதுமான அனுபவம் இல்லாததால் தன் கூட்டத்தை தவறாக அது வழி நடத்தியிருக்கலாம்," என்று கூறினார். பொதுவாக யானைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி அழைத்துச் செல்வது பெண் யானைதான்.

மேலும் காடுகள் அழிப்பு காரணமாக யானைகள் மனிதர்கள் வாழும் இடம் நோக்கி நகரத் தொடங்கியதாக தெரிவிக்கிறார்.

வேறு சிலரோ, காடுகளில் வெறும் புல்லையும் இலைகளையும் மரப்பட்டைகளையும் தின்று சலித்துப்போன யானைகள், மனிதர்கள் விளைவிக்கும் சுவையான உணவுப் பயிர்களால் ஈர்க்கப்பட்டு காடுகளை விட்டு நகருக்குள் வரத் தொடங்கியிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

நீண்ட தூரம் பயணம் செய்த களைப்பால் சியாங் காட்டுப்பகுதியில் நிம்மதியாக அயர்ந்து உறங்குகின்றன யானைகள். புலி, சிங்கம் போன்ற

ஆபத்தான விலங்குகள் இல்லாத பகுதிகளில் மட்டுமே அவை உறங்கும். படம்: ராய்ட்டர்ஸ்