சிங்கப்பூரில் இந்த ஆண்டில் இடம்பெறும் போதைப்பொருள் புழக்க எதிர்ப்பு இயக்கத்திற்கு இங்குள்ள 71 பள்ளிவாசல்களும் ஆதரவு அளிக்கும்.
இந்தப் போராட்டத்தில் மும்முரமாக பங்காற்றும்படி சமூகத்திற்கு ஊக்க மூட்டும் நோக்கத்துடன் கூடிய சிறப்பான அறநெறி போதனைச் செயல்திட்டமும் இதில் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
'டாடா இத்து ஹராம்' என்ற அந்த போதனைச் செயல் திட்டத்தை உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம், உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் முகம்மது ஃபைசல் இப்ராஹிம் இருவரும் நேற்று பிடோக்கில் இருக்கும் அல் அன்சார் பள்ளிவாசலில் தொடங்கிவைத்தனர்.
முயிஸ் அமைப்பின் தலைமை நிர்வாகியான ஈசா மசூது, துணை முஃப்தி உஸ்தாத் டாக்டர் முகம்மது ஹான்னன் யாசன் ஆகியோரும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
அனைத்துலக போதைப்பொருள் புழக்கம் மற்றும் கடத்தல் ஒழிப்பு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி இங்கு வருடாந்திர போதைப் புழக்க எதிர்ப்பு இயக்கம் தொடங்கப்பட்டு இருக்கிறது.
இந்த இயக்கத்தை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவும் முயிஸ் அமைப்பும் சேர்ந்து நடத்துகின்றன. இந்த முயற்சி 2017ல் தொடங்கப்பட்டது.
அதற்குச் சென்ற ஆண்டு 15 பள்ளிவாசல்கள் ஆதரவு அளித்தன. இந்த ஆண்டு 71 பள்ளிவாசல்களும் உதவிக்கரம் நீட்டுகின்றன. போதைப்பொருளுக்கு எதிரான போரில் சமூகம் ஈடுபாடு கொள்ள வேண்டியது முக்கியமானது என்பதை வலியுறுத்தும் சிறப்பு அறநெறி போதனை வெள்ளிக்கிழமை தொழுகையின்போது இடம்பெற்றது.
அந்தப் போதனையை முஃப்தி அலுவலகம் உருவாக்கி இருக்கிறது.
போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தில் சமூகம் ஈடுபட வேண்டியதன் முக்கியத்துவத்தை நினைவுபடுத்தும் பதாகைகள் பள்ளிவாசல்களில் பொருத்தப்படும்.
இதனிடையே, நேற்றைய நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சண்முகம், இந்தப் போராட்டத்திற்குப் பல ஆண்டுகாலமாக ஆதரவு அளித்து வரும் முயிஸ் அமைப்புக்கு நன்றி தெரிவித்தார்.
"சமூகத்தில் போதைப்பொருளுக்கு எதிரான புரிந்துணர்வை மேம்படுத்த முயிஸ் அமைப்பும் பள்ளிவாசல்களும் கொண்டிருக்கும் கடப்பாடு, இன்றைய செயல்திட்டத் தொடக்கத்தின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
"அணுக்கமாகச் சேர்ந்து செயல்படும் அணுகுமுறையையும் இன்றைய நிகழ்ச்சி உறுதிப்படுத்தி இருக்கிறது," என்று அமைச்சர் தெரிவித்தார்.
போதைப்பொருள் புழக்கத்தை ஒழிக்கும் போராட்டத்தில் பள்ளிவாசல்கள் தரும் ஆதரவு முக்கியமானது என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், போதைப்பொருள் புழக்கத்தை ஒழிக்கவும் குற்றவாளிகள் திருந்தி வாழ்வதற்கான ஆதரவை அதிகப்படுத்தவும் பள்ளிவாசல்கள் உள்ளிட்ட அனைத்து சமூகப் பங்காளிகளோடும் தொடர்ந்து செயல்படப்போவதாகவும் குறிப்பிட்டார்.

