சிங்கப்பூர் பள்ளிக்கூடங்களில் இனவாதப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் பல நடவடிக்கைகளை கல்வி அமைச்சும் தேசிய கல்விக் கழகமும் எடுத்து வருகின்றன.
சரியான நன்னெறிகளைக் கொண்டவர்கள், மாணவர்களுடன் இனவாத விவாதிப்புகளை மிகவும் விவேகமான முறையில் நடத்தக்கூடியவர்கள், இன நல்லிணக்கத்தை ஆதரிப்போரை ஆசிரியர் பணிக்கு இந்த இரண்டும் தேடி வருகின்றன. வேலைக்கு புதிதாக யாராவது சேரும்போது அவர்கள் இந்த அடிப்படைகளைக் கொண்டு மதிப்பிடப்படுகிறார்கள்.
பிறகு நான்கு மாதம் இடம்பெறும் கட்டாய ஒப்பந்த காலத்தின்போதும் இந்த மதிப்பீடு தொடர்ந்து இடம்பெறும்.
அதற்கு பிறகுதான் வகுப்புகளில் அவர்கள் பாடம் போதிக்க முடியும் என்று அமைச்சும் கழகமும் தெரிவித்தன.
ஆசிரியர் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவோர் பன்மய மாணவர்களை ஈடுபடுத்துவதற்கு பொருத்தமானவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் இனவாத நம்பிக்கை உடையவர்கள் விலக்கி வைக்கப்படுகிறார்கள் என்பதையும் உறுதிப்படுத்தும் வகையில் இடம்பெறும் பல முயற்சிகள் பற்றி ஒரு கூட்டறிக்கையில் இந்த இரண்டு அமைப்புகளும் குறிப்பிட்டுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

