குவெக் வி கியோங் என்ற 62 வயது மாது, தான் வேலை பார்த்த 'கோல்டன் லைட் எச்எஸ் பங்க்கரிங்' என்ற நிறுவனத்திடம் இருந்து $1.2 மில்லியனுக்கும் அதிக தொகையைத் தவறாகக் கையாண்டார்.
தன் தோழிகளில் ஒருவரான நினைவாற்றல் குறைந்த 91 வயது மாதிடம் இருந்து $180,000க்கும் அதிகத் தொகையை அவர் எடுத்துக்கொண்டார்.
விடுமுறையில் பல இடங்களுக்கும் சென்று அந்தப் பணத்தைச் செலவிட்டு குவெக் மகிழ்ந்தார்.
உள்ளூரிலும் இந்த வட்டாரத்திலும் அந்தப் பணத்தை வைத்து அவர் சூதாடினார். தான் வேலை பார்த்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் அறவே பணம் இல்லாமல் போனபோதுதான் அதிலிருந்து பணம் எடுக்கும் வேலையை அந்த மாது நிறுத்தினார் என்று நீதிமன்ற விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது. குவெக் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவருக்கு ஆறாண்டுகள், 10 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் இந்தக் குற்றங்களை 2015 டிசம்பர் முதல் 2018 மார்ச் வரை செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
2018 மார்ச் முதல் ஜூலை வரை அவர் தன் தோழியின் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி 132 தடவை பணம் எடுத்து இருக்கிறார் என்றும் குறிப்பிடப்பட்டது.

