செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read

சாம்பியா முன்னாள் அதிபர் மரணம்: சிங்கப்பூர் அனுதாபம்

ஆப்பிரிக்காவில் இருக்கும் சாம்பியா நாட்டின் முன்னாள் அதிபர் கென்னத் கவுண்டா (படம்) மரணமடைந்தார்.

அதனை ஒட்டி அந்த நாட்டின் அதிபரான எட்ஜர் லுங்குவுக்கும் சாம்பியா மக்களுக்கும் கடிதம் மூலம் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் அனுதாபம் தெரிவித்துள்ளார்.

சுதந்திர சாம்பியாவின் முதல் அதிபரான டாக்டர் கவுண்டா, தனது 97வது வயதில் ஜூன் 17ஆம் தேதி மரணமடைந்தார். ஆப்பிரிக்க சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களில் குறிப்பிடத்தக்க தலைவர் என்று டாக்டர் கவுண்டா நினைவகூரப்படுவார் என ஜூன் 24 ஆம் தேதியிடப்பட்ட தனது கடிதத்தில் அதிபர் ஹலிமா குறிப்பிட்டு இருக்கிறார்.

நவீன காமன்வெல்த் அமைப்பு உருவாக டாக்டர் கவுண்டா வழிகாட்டினார் என்பதையும் சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற பிறகு தொடக்க ஆண்டுகளில் அவர் சிங்கப்பூருக்கு ஆதரவு அளித்ததையும் கடிதத்தில் அதிபர் ஹலிமா சுட்டிக்காட்டினார்.

உலக நிதித்துறை தொழில்நுட்பம்: 4வது இடத்தில் சிங்கப்பூர்

உலக நிதித் துறை தொழில்நுட்ப நாடுகள் பட்டியலில் 3வது இடத்தில் இருந்த சிங்கப்பூர் 4வது இடத்திற்கு இறங்கி இருக்கிறது. என்றாலும் அது ஆசிய பசிபிக் வட்டார நாடுளில் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

ஆஸ்திேரலியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் இந்த ஆண்டில் சிங்கப்பூருக்கு கடும் போட்டியாக இருந்தன. இந்த நாடுகள் பட்டியலில் மேம்பட்டுள்ளன.

'உலகளாவிய நிதித் துறை தொழில்நுட்பப் பட்டியல்' என்று குறிப்பிடப்படும் அட்டவணையைப் பார்க்கையில், நகர்களைப் பொறுத்தவரை சிங்கப்பூர் ஆறு இடங்கள் இறங்கி 10வது இடத்தில் இருக்கிறது.

எண்பதுக்கும் மேற்பட்ட நாடுகள், 264 நகர்கள், 11,000 நிதித்துறை தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவை அந்தப் பட்டியலில் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன.

ஆய்வு: 3 வயதில் இனப்பற்று

சிங்கப்பூரில் பாலர்களுக்கு, குறிப்பாக அவர்கள் சிறுபான்மை இனத்தவர் எனில், அவர்களின் மூன்றாவது வயதில் இனப்பற்று உருவாகக் கூடும் என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் நடத்திய ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

பாலர் பள்ளிகளைச் சேர்ந்த சீனப் பிள்ளைகளைப் பொறுத்தவரை, அவர்கள் இந்தியப் பிள்ளைகளைப் போல் அல்லாது, உள்ளார்ந்த மற்றும் வெளிப்படையான பாரபட்ச போக்குடன் நடந்துகொள்கிறார்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது. அந்த ஆய்வில் 158 பிள்ளைகள் கலந்து கொண்டனர். அவர்களில் 87 சீனப் பிள்ளைகள், 71 இந்தியப் பிள்ளைகள் அடங்குவர். மூன்று முதல் ஆறு வரை வயதுள்ள அந்தப் பிள்ளைகள் 10க்கும் மேற்பட்ட பாலர் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள்.

இதனிடையே, அந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய இணைப் பேராசிரியர் சித்தோ பெய்பெய், 42, தனது ஆய்வின் முலம் தெரிய வந்தவை உலக நிலவரங்களை ஒத்து இருப்பதாகத் தெரிவித்தார்.

பாலர் பள்ளிப் பிள்ளைகள் ஆண் என்றால் ஆணுடன் பெண் என்றால் பெண்ணுடன் பழகும் போக்குடன் நடந்துகொள்கிறார்கள். தங்கள் இனப் பிள்ளைகளையே தேர்ந்து எடுத்துக்கொள்கிறார்கள், வேறு மொழிப் பிள்ளை களைவிட தங்கள் தாய்மொழிப் பிள்ளைகளுடன் பழகவே அவர்கள் விரும்புகிறார்கள் என்பது உலக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

சீனப் பிள்ளைகள் தங்கள் சொந்த இனப்பற்றுடன் காணப்படுவதற்கு அவர்கள் சிங்கப்பூரில் பெரும்பான்மைக் குழுவாக இருப்பதே காரணமாக இருக்கக்கூடும் என்று பேராசிரியர் விளக்கினார்.