கொரோனா காலகட்டத்தில் சிறுவர்களின் இரக்க குணம் அளப்பரியதாக இருக்கிறது. விடுமுறையில் புக்கிட் பாத்தோக்கில் தன்னுடைய சேமிப்புத் தொகையைக் கொண்டு உணவுப் பொருட்களை வாங்கி தேவைப்பட்டவர்களுக்கு வழங்கி வருகிறார் சிறுமி ஷக்தி சரவணன்.
அவரைப்போல நான்கு வயதே ஆன கேசவ் தன்னுடைய பிறந்தநாளின்போது கிடைத்த ரொக்கத் தொகையைப் பயன்படுத்தி அன்பளிப்புப் பொட்டலங்களைத் தயார் செய்து அவற்றை வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கிச் சிறப்பித்துள்ளார்.
கேசவ் தன் வீட்டிற்கு அருகே வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்களை மாமா என்று அழைத்து, அவர்களுக்கு பானங்கள், பிஸ்கெட்டுகள், கிருமி நாசினிகளை நேரடியாகச் சென்று வழங்கியுள்ளார்.
தானாகவே தள்ளுவண்டியில் 100 பொட்டலங்களை வைத்துத் தள்ளிக்கொண்டு சென்று அவற்றை அவர்களுக்கு வழங்கினார்.
மாமா என்று அவர் அன்பாக அழைக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் முதலில் கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பிறகே கேசவ் வழங்கிய அன்பளிப்புப் பொருட்களைப் பெற்றனர்.
அன்பளிப்புப் பொட்டலங்களை அவரும் அவருடைய தங்கை ஜனனியும் தயார் செய்ய அவரின் பெற்றோர் உதவினர். வெளிநாட்டு மாமா, போலிஸ், வயதானவர்கள் என அனைவருக்கும் 100 பொட்டலங்களை வழங்க அவருக்கு சுமார் ஒரு வாரம் பிடித்தது என்று கூறினர் அவரின் பெற்றோர்.
கொரோனா நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கேசவ்வின் பெற்றோர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
ஒவ்வொருமுறையும் அன்பளிப்புப் பைகளை வழங்கும்போது கேசவ்வும் அவரின் தங்கை ஜனனியும் கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து பாதுகாப்பாக இருந்தனர்.
தற்பொழுது தங்களுடைய நண்பர்களும் முகக்கவசம், கிருமிநாசினி ஆகியவற்றை வாங்கிக்கொடுத்து இருப்பதாகவும் இந்தச் சேவையைத் தொடர இருப்பதாகவும் 'மதர்ஷிப்' இணையத்தளத்தில் தெரிவித்தனர் கேசவ்வின் பெற்றோர்.

