நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக

நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக

2 mins read

வேலன், வீரன் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் பள்ளி விடுமுறை நாட்களில் வீட்டிற்கு அருகே இருக்கும் நீர்த்தேக்கத்திற்குச் சென்று விளையாடுவது வழக்கம். ஜூன் மாத விடுமுறையில் கொரோனா நோய்த்தொற்றுக்குப் பயந்து வீட்டைவிட்டு வெளியே செல்ல பெற்றோர் அனுமதிக்கவில்லை.

ஒருநாள் வீரன் வேலனின் வீட்டிற்குச் சென்று அவர்களின் பெற்றோரிடம், "எப்பொழுதும் நாங்கள் விளையாடும் அந்த நீர்த்தேக்கத்தில் உடற்பயிற்சி செய்துவிட்டு வருகிறோம். அதற்கு உங்களின் அனுமதி வேண்டும்," என்று கேட்டான். வேலன் எப்போதும் சோம்பேறியாக இருப்பதைப் பார்த்த பெற்றோர், "சிறிது நேரம் விளையாடிவிட்டு வேறு எங்கும் செல்லாமல் வீட்டிற்கு வரவேண்டும்," என்று கூறி அனுப்பி வைத்தனர்.

அவர்கள் மகிழ்ச்சியுடன் நீர்த்தேக்கத்திற்குச் சென்று ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது வேலன், "வீரா அந்த நீர்த்தேக்கத்தில் பார். மரக் கட்டைகள் மிதக்கின்றன. நாம் அதைப் பிடித்துக்கொண்டு தண்ணீரில் சிறிது நேரம் நிற்கலாமா?" என்று வினவினான்.

"அது மரக்கட்டைதானா என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. இரு அவசரப்படாதே," என்று கூறி கீழே கிடந்த ஒரு சிறு கல்லைத் தூக்கி கட்டையை நோக்கி எறிந்தான் வேலன்.

அடுத்த நிமிடமே ஒரு பெரிய முதலை அவர்களை நோக்கி தண்ணீருக்கு மேலே வந்தது.

அதைப் பார்த்த வேலனும் வீரனும் தலைதெறிக்க ஓடித் தப்பித்தனர். எதையும் யோசித்துச் செய்யும் வீரனின் குணமே அவர்களை முதலையிடமிருந்து காப்பாற்றியது.

இதையே கொன்றை வேந்தன் என்ற நீதி நூலை எழுதிய ஔவையார் 'நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக' என்று குறிப்பிட்டுள்ளார். (சிறிய காரியமாக இருந்தாலும் யோசித்து செயல்படவேண்டும்) என்பது அதன் பொருள்.

ரமேஷ் குமார் ரக்ஷரன்

தொடக்கநிலை 4 புக்கிட் தீமா தொடக்கப் பள்ளி