ஒன்று நூறானது; அதனால்
தந்தைக்கு வந்தது தலைவலி
இன்றைய காலகட்டத்தில் உலகளவில் இணையம் வழி பொருட்களை வாங்கும் மக்கள் அதிகமாக உள்ளனர். அதுபோல் தினந்தோறும் உணவுப் பொருட்களை நேரடியாக கைத்தொலைபேசி மூலம் வாங்கி உண்ணும் பழக்கமும் அதிகரித்து வருகிறது.
சீனாவின் ஜிலின் நகரைச் சேர்ந்த சிறுமிக்குப் பசி எடுத்தது. 'பசி வந்தால் பத்தும் பறந்து போகும்' அல்லவா? அவர் தந்தை எப்போதும் கைத்தொலைபேசி மூலம் உணவு வாங்குவதை பார்த்திருந்த சிறுமி தானும் அதுபோல் உணவு வாங்க முடிவெடுத்தார்.
உடனே எடுத்தார் தந்தையின் கைத்தொலைபேசியை. தந்தை எப்போதும் அழைக்கும் கடையின் எண்ணை அழுத்தி நூடல்ஸ் வேண்டும் என்று பதிவு செய்தார்.
அவர் செய்தது அனைத்தும் சரிதான். ஆனால் நூடல்ஸ் 1 என்று போட்டுவிட்டு ஒன்றுக்குப் பக்கத்தில் இரண்டு சுழியத்தைப் (சைபர்) போட்டுவிட்டார்.
பிறகு என்ன? வந்தது 100 கிண்ணங்களில் நூடல்ஸ். அதைப் பார்த்த சிறுமியின் தந்தை முதலில் அதிர்ச்சி அடைந்தார். பிறகு தனக்கு அதிர்ஷ்டக் குலுங்கில் நூடல்ஸ் பரிசாக கிடைத்திருக்கிறது என்று நினைத்தார்.
உணவு கொண்டு வந்த பணியாளர் "வீட்டில் ஏதாவது விசேஷமா? நூறு நூடல்ஸ் கிண்ணங்கள் வாங்கி இருக்கிறீர்கள்?" என்று கேட்ட பிறகுதான் சிறுமியின் தந்தைக்கு உண்மையில் என்ன நடந்தது என்று புரிந்தது.
உணவுக் கிண்ணங்கள் அனைத்தும் வரவேற்பு அறை முழுவதையும் நிறைத்தது. குடும்பத்தினரால் எட்டு கிண்ணங்களில் இருந்த நூடல்ஸை மட்டுமே உண்ண முடிந்தது. மீதி இருந்த 92 கிண்ணங்களை வழிப்போக்கர்கள், துப்புரவுப் பணியாளர்கள், முதியவர்கள் ஆகியோரிடம் இலவசமாக பெற்றோர் வழங்கினர்.

