தோக்கியோ: அமெரிக்க நீச்சல் நட்சத்திரம் கேலப் டிரெசல் ஆண்களுக்கான 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டியில் உலகச் சாதனை படைத்து தங்கம் வென்றுள்ளார். அவர் எடுத்துக்கொண்ட நேரம் 49.45 வினாடி. இதற்கு முன் இந்தப் போட்டியில் உலகச் சாதனையைப் படைத்தவரும் இவரே. இதர போட்டியாளர்கள் அபாரமாக நீந்தியதால் தங்கம் வெல்ல உலகச் சாதனையை முறியடிக்கவேண்டியிருந்தது, ஒலிம்பிக் விளையாட்டுகளில் இவ்வாறு அடிக்கடி நடக்காது எனக் கூறி சக போட்டியாளர்களைக் கௌரவித்தார் டிரெசல்.
வெள்ளிப் பதக்கத்தை ஹங்கேரியின் கிரிஸ்டொஃப் மிலாக்கும் வெண்கலத்தை சுவிட்சர்லாந்தின் நோ பொன்டியும் வென்றனர்.
பெண்கள் 800 மீட்டர் எதேச்சை பாணி நீச்சல் போட்டியில் தங்கத்தைக் கைப்பற்றினார் மற்றோர் அமெரிக்கரான கேட்டி லடெக்கி. அவர் எடுத்துக்கொண்ட நேரம் 8 நிமிடம் 12.57 வினாடி. வெள்ளியை வென்றார் அவரது பரம வைரியான ஆஸ்திரேலியாவின் எரியார்ன் டிட்மஸ். வெண்கலப் பதக்கம் இத்தாலியின் சிமோனா குவாடரெல்லாவிற்குச் சென்றது.
ஒலிம்பிக் விளையாட்டுகளில் முதன்முறையாக நடைபெற்ற ஆண்களும் பெண்களும் சேர்ந்து பங்கேற்கும் 100 மீட்டர் கலப்பு அஞ்சல் நீச்சல் போட்டியில் பிரிட்டன் தங்கம் வென்றது. 1908 ஒலிம்பிக் விளையாட்டுகளுக்குப் பிறகு இம்முறைதான் நீச்சல் போட்டிகளில் பிரிட்டன் ஆகச் சிறப்பாகச் செய்துள்ளது. போட்டிகளில் ஏழு பதக்கங்களை வென்றுள்ளது பிரிட்டன்.

