செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

ஊக்க மருந்து: வீரருக்குத் தடை

தோக்கியோ: தடை செய்யப்பட்ட மருந்தை உட்கொண்டதால் நைஜீரியா வேக ஓட்ட விரர் பிலெசிங் ஒக்காக்பாரே ஒலிம்பிக் விளையாட்டுகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

100 மீட்டர் ஓட்டத்தின் அரையிறுதிச் சுற்றுக்கான தகுதிச் சுற்றில் 32 வயது ஒக்காக்பாரே பங்கேற்றிருந்தார். தகுதிச் சுற்றில் அவர் எடுத்துக்கொண்ட நேரம் 11.05 வினாடி.

ஏற்கெனவே 10 நைஜீரிய வீரர்கள் ஊக்க மருந்து உட்கொண்டதற்காக விளையாட்டுகளிலிருந்து நீக்கப்பட்டனர்.

அரையிறுதியில் அமெரிக்கா

தோக்கியோ: ஒலிம்பிக் விளையாட்டுகளின் பெண்கள் காற்பந்துப் போட்டியில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது அமெரிக்கா. போட்டியின் காலிறுதிச் சுற்றில் அமெரிக்கா நெதர்லாந்தை வென்றது.

ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. அதனால் பெனால்டிகளின் மூலம் வெற்றியாளர் அணி நிர்ணயிக்கப்பட்டது.

பெனால்டிகளில் 4-2 எனும் கோல் கணக்கில் வென்ற அமெரிக்கா, அரையிறுதிச் சுற்றில் அண்டை நாடான கனடாவைச் சந்திக்கும்.

ஒலிம்பிக் பெண்கள் காற்பந்தில் இதுவரை நான்கு முறை தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது அமெரிக்கா.

மற்றோர் அரையிறுதியாட்டத்தில் ஆஸ்திரேலியாவும் சுவீடனும் மோதும்.

10,000 மீட்டர் ஓட்டம்: எத்தியோப்பியாவுக்கு தங்கம்

தோக்கியோ: ஆண்கள் 10,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் எத்தியோப்பியாவின் செலெமொன் பரேகா தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார். அவர் எடுத்துக்கொண்ட நேரம் 27 நிமிடம் 43.22 வினாடி.

சென்ற ஒலிம்பிக் விளையாட்டுகளில் இதே பிரிவில் ஆறாவதாக வந்தார் பரேகா.

போட்டியை யுகாண்டாவின் ஜோஷுவா செப்டெகேய்தான் வெல்வார் எனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

இறுதியில் அவரால் வெள்ளிப் பதக்கத்தை மட்டுமே வெல்ல முடிந்தது.

வெண்கலப் பதக்கமும் யுகாண்டாவிற்குச் சென்றது. அதை வென்றார் அந்நாட்டின் ஜேக்கப் கிப்லிமோ.

'ஐரோப்பிய சூப்பர் லீக்கை தொடர்வோம்'

மட்ரிட்: பெரும் சர்ச்சையை உருவாக்கிய ஐரோப்பிய சூப்பர் லீக் திட்டத்தைச் செயல்படுத்தும் முயற்சியைத் தொடர்ந்து எடுக்கப்போவதாக பார்சிலோனா, ரியால் மட்ரிட், யுவென்டஸ் ஆகிய அணிகள் தெரிவித்துள்ளன.

அதன் தொடர்பில் ஐரோப்பிய காற்பந்துக் கூட்டமைப்பு இந்த அணிகளைச் சட்டரீதியாகத் தண்டிக்கக்கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து அவை அவ்வாறு கூறின.

மான்செஸ்டர் யுனைட்டெட், லிவர்பூல், ஆர்சனல் உட்பட ஸ்பெயின், இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 12 அணிகள் திட்டத்தில் இடம்பெற்றிருந்தன.

லீக்கின் கட்டமைப்பின் தொடர்பில் ரசிகர்கள் உட்பட பல தரப்பினரிடையே கோபம் ஏற்பட்டதால் ஒன்பது அணிகள் திட்டத்திலிருந்து விலகிக்கொண்டன.

தற்போது ஸ்பெயினின் பார்சிலோனா, ரியால் மட்ரிட் மற்றும் இத்தாலியின் யுவென்டஸ் ஆகியவை திட்டத்திலிருந்து விலகிக்கொள்ளவில்லை.