தோக்கியோ: ஒலிம்பிக் விளையாட்டுகளின் ஆண்களுக்கான காற்பந்துப் போட்டியில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது பிரேசில். காலிறுதிச் சுற்றில் பிரேசில் எகிப்தை 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது.
உலகக் காற்பந்தில் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக இருந்தாலும் ஒலிம்பிக் விளையாட்டுக் காற்பந்தில் பல ஆண்டுகளாக பிரேசில் தங்கம் வெல்லாமல் இருந்தது. ஒருவழியாகச் சென்ற ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
மற்றொரு காலிறுதியாட்டத்தில் கூடுதல் நேரத்திற்குப் பிறகு ஐவரி கோஸ்ட்டை 5-2 எனும் கோல் கணக்கில் வென்றது, கடைசியாக 1992 ஒலிம்பிக் விளையாட்டுகளில் தங்கம் வென்ற ஸ்பெயின்.
அந்த ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகள் ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் அரங்கேறின.
இன்னொரு காலிறுதியாட்டத்தில் பெனால்டிகளில் நியூசிலாந்தை 4-2 எனும் கோல் கணக்கில் வெற்றிகண்டது ஜப்பான்.
கோலின்றி முடிந்த ஆட்டம் பெனால்டிகள் வரை சென்றது. ஒலிம்பிக் வரலாற்றில் ஆண்களுக்கான காற்பந்துப் போட்டியில் முதன்முறையாகத் தங்கம் வெல்லும் இலக்கைக் கொண்டுள்ளது, பிரபல அணிகளை ஒரு கை பார்க்கக்கூடிய ஆற்றல் கொண்ட ஜப்பான்.
கடைசி காலிறுதியாட்டத்தில் தென்கொரியாவை 6-3 எனும் கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது மெக்சிக்கோ.
இதுவரை ஒலிம்பிக் விளையாட்டுகளின் ஆண்களுக்கான காற்பந்துப் போட்டியில் ஒரு முறை தங்கம் வென்றிருக்கிறது மெக்சிக்கோ.
அந்த நிகழ்வு 2012ஆம் ஆண்டு லண்டனில் இடம்பெற்றது.

