அயர்லாந்தின் ட்ராலி பே என்ற கடற்பகுதியில் 12 மணி நேரம் சிக்கித் தவித்த நீச்சல் வீரரை காப்பாற்றி இருக்கின்றன டால்பின்கள்.
நீச்சல் வீரர் தன்னுடைய பாதுகாப்பு உடைகளை கரையில் விட்டுவிட்டு 8 கி.மீட்டர் தூரத்தில் இருக்கும் முக்லாக்மோர் பாறைக்கு நீந்திச் செல்ல முயன்று இருக்கிறார்.
ஆனால் கடல்நீர் மிகவும் குளிராக இருந்ததால் அவரால் தொடர்ந்து நீந்தி பாறையையோ கடற்கரையையோ அடைய முடியவில்லை. கடலில் சிக்கித் தவித்த அவரைக் கண்ட டால்பின் கூட்டம் அவரைச் சுற்றிச் சுற்றி வந்து அவரைப் பாதுகாக்கத் தொடங்கின.
வெகு நேரமாக அவர் திரும்பாததால் தன்னார்வல மீட்புக் குழுவினர், தங்களின் மீட்புப் படகுகளைக்கொண்டு தேடத் தொடங்கினார்கள். பகல் முழுவதும் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியாததால் தேடுதல் வேட்டையை நிறுத்த முடிவு செய்தனர்.
இந்நிலையில், இரவு 8.30 மணியளவில் கடற்கரையிலிருந்து 2.3 கி.மீட்டர் தூரத்தில் டால்பின் கூட்டம் நீந்துவதையும் அவற்றுக்கு இடையே ஒரு தலை தெரிவதையும் கண்டனர்.
உடனே மீட்புக் குழுவினர் அங்கு விரைந்தபோது நீச்சல் வீரர் அங்கு குளிரினால் தத்தளித்துக்கொண்டு இருப்பதைக் கண்டு அவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.
மீட்புக் குழுவினர் கூறும்போது, "டால்பின்கள் அங்கு இல்லாவிட்டால் அந்த இரவு நேரத்தில் எங்களால் அவரைக் கண்டுபிடிக்க முடிந்திருக்காது.
"அவை அவரைப் பாதுகாத்ததுடன் எங்களுக்கும் அவர் இருக்கும் இடத்தை எச்சரிக்கை செய்து தெரிவித்தன. அவை இல்லையென்றால் அவரை உயிருடன் மீட்டிருக்க முடியாது," என்று கூறினார்.
டால்பின் அறிவுக் கூர்மை வாய்ந்த உயிரினங்களில் ஒன்றாகும். மனிதர்களுடன் நன்கு பழகக்கூடிய டால்பின்கள், மனிதனைப் பாதுகாத்தும் உள்ளன.

