சிங்கப்பூரில் 56 இடங்களில் இன்று முதல் 100 இயந்திரங்களில் கொவிட்-19 சுயபரிசோதனை கருவிகளை மக்கள் பெறலாம்.
அந்த இயந்திரங்கள் பல்வேறு குடியிருப்புப் பேட்டைகளிலும் அமைந்திருக்கும். கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளாகி இருக்கக்கூடியவர்கள் எப்போது வேண்டுமானாலும் அவற்றில் இருந்து அந்தக் கருவியைப் பெறலாம்.
எங்கெங்கு அந்த இயந்திரங்கள் இருக்கின்றன என்பதையும் அவற்றில் இருந்து அந்தக் கருவியைப் பெறுவதற்கான விளக்கத்தையும் https://www.gowhere.gov.sg/art என்ற இணையத் தளத்தில் பெறமுடியும்.
தொற்று ஆபத்து எச்சரிக்கை அல்லது சுகாதார ஆபத்து எச்சரிக்கை தகவல்களைக் குறுஞ்செய்தி மூலம் பெறுவோருக்கு இன்று முதல் அவர்கள் பின்பற்ற வேண்டிய பரிசோதனை நடைமுறை பற்றிய விளக்கங்களையும் சுகாதார அமைச்சு அளிக்கும்.
அவர்கள் தங்கள் அடையாள அட்டையை அல்லது வேலை அனுமதி அட்டையைப் பயன்படுத்தி இயந்திரங்களில் இருந்து மூன்று கருவிகளைப் பெறமுடியும். பல்வேறு நிபந்தனைகளுக்கு ஏற்ப அவர்கள் உடல்நிலையைப் பரிசோதித்து வரவேண்டும்.
இதனிடையே, ஆகஸ்ட் 28 முதல் வீடுகளுக்குச் சுயபரிசோதனைக் கருவிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. வரும் திங்கட்கிழமை நிலவரப்படி சுமார் 90% குடும்பத்தினர் அக்கருவியைப் பெற்று இருப்பர் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று மெய்நிகர் பேட்டியில் தெரிவித்தார்.
பள்ளிகளுக்கும் நிறுவனங்களுக்கும் அந்தக் கருவிகள் கொடுக்கப்படுவதையும் அவர் சுட்டினார். ஒவ்வொருவரும் சுயபரிசோதனைக் கருவியைப் பயன்படுத்தி தங்கள் உடல்நிலையை சோதித்துக்கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர்.
இக்கருவியைப் பயன்படுத்துவது கொவிட்-19 காலத்தின் புதிய ஒரு பழக்கமாக ஆகும் என்று தான் நம்புவதாகவும் அமைச்சர் கூறினார்.

