செய்திக்கொத்து

செய்திக்கொத்து

4 mins read

சிறார்களுக்குத் தடுப்பூசி: பரந்த அளவிலான தகவல்கள் தேவை

சிங்கப்பூரில் சிறார்களுக்குத் தடுப்பூசி போட வேண்டுமா, வேண்டாமா என்பதைப் பற்றி முடிவு செய்வதற்கு முன் பரந்த அளவிலான தகவல்கள் தேவை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. ஃபைசர்-பயோஎன்டெக், மொடர்னா ஆகிய தடுப்பூசிகள் சிறார்களுக்குப் போடப்பட்டு சோதிக்கப்படு கின்றன. இருந்தாலும் அவற்றின் முடிவுகள் இனிமேல்தான் வெளிவர வேண்டும்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட பெரியவர்களில் குறைந்த வயதுள்ளவர்களுக்கும் பதின்ம வயதினருக்கும் பாதக விளைவுகள் ஏற்பட்டு இருப்பதால் சிறார்களுக்குப் பாதிப்பு அதிகமாக ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

டியுக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் ஊய் எங் யோங் வியாழக்கிழமை நடந்த இணையக் கருத்தரங்கு ஒன்றில் இது பற்றி கருத்து தெரிவித்தார். சிறார்களுக்குத் தடுப்பூசி மூலம் பாதுகாப்பு கிடைக்கலாம் என்று அவர் கருத்துரைத்தார்.

சிறார்களுக்குத் தடுப்பூசி போடுவதால் ஏற்படக்கூடிய சாதகங்கள், பாதகங்கள் பற்றி சீர்தூக்கிப் பார்ப்பதற்குப் பரந்த அளவிலான அதிக விவரங்கள், தகவல்கள் தேவை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஏற்பாடு செய்த அந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்ட மூன்று வல்லுநர்கள் கருத்து கூறினர்.

பேரன், பேத்திகளுடன் தாத்தா, பாட்டிகள் அணுக்கமாக இருப்பார்கள் என்பதால் பேரன், பேத்திகள் தடுப்பூசி போட்டுக்கொள்வது தாத்தா, பாட்டிகளையும் பாதுகாக்கும் என்பதையும் வல்லுநர்கள் சுட்டினர்.

'சிங்கப்பூர் கொடுக்கும்

விலையைப் பொறுத்தது'

கொவிட்-19 கிருமித்தொற்றைச் சமாளித்து அதோடு சேர்ந்து வாழும் வகையில் சிங்கப்பூர் எவ்வாறு முன்னேற முடியும் என்பது அதைச் சாதிக்க அது கொடுக்க முன்வரும் விலையைப் பொறுத்து இருக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

கொவிட்-19 தொற்று நிலவரத்தைப் பொறுத்தவரை, நூற்றுக்குநூறு பாதுகாப்பான வாய்ப்பு என்று எதுவும் இல்லை. இருப்பதிலேயே சிறந்ததைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டி இருக்கிறது என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக சோ சுவீ ஹோக் பொது சுகாதார பள்ளியின் தொற்றுநோய் துறை வல்லுநர் இணைப் பேராசிரியர் சூ லி யாங் தெரிவித்தார்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஏற்பாடு செய்த இணையக் கருத்தரங்கில் கலந்துகொண்ட மூன்று வல்லுநர்களில் அவர் ஒருவர். கட்டுப்பாடுகளைத் தளர்த்தும்போது கடுமையான பாதிப்புகளும் மரணங்களும் அதிகரிக்கக்கூடும். மரணங்களைத் தவிர்க்க வேண்டியது இலக்கானால் சமூகம் எதிர்நோக்கக்கூடிய கட்டுப்பாடுகள் அதிகமாக இருக்கும் என்பதை அவர் சுட்டினார்.

அந்தக் கருத்தரங்கில் பேசிய டியுக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளி பேராசிரியர் ஊய் எங் யோங், சிங்கப்பூர் மரண அளவை 0.1%க்கும் குறைவாக நிலைநாட்டி வருகிறது என்றும் இது மிகமிக குறிப்பிடத்தக்கது என்றும் தெரிவித்தார்.

கருத்தரங்கில் கலந்துகொண்ட தேசிய தொற்றுநோய் நிலையத்தின் நிர்வாக இயக்குநரான பேராசிரியர் லியோ யீ சின், இதுவரை சிங்கப்பூர் மிக அருமையாக செயல்பட்டு மரணங்களை மிகமிக குறைந்த அளவில் வைத்திருக்கிறது என்று கூறினார்.

தடுப்பூசி போடப்பட்டுள்ள மக்களின் அளவு எந்த அளவுக்கு இருந்தாலும் கொவிட்-19க்கு எதிராக சமூகத்தில் நோய்த் தடுப்பாற்றல் ஏற்படாது என்பதே உண்மை நிலவரமாக இருக்கும். சென்ற ஆண்டு பலனளித்த நடவடிக்கைகள் இனிமேல் பலனளிக்காமல் போகலாம் என்று வல்லுநர்கள் எச்சரித்தனர். மேலும் பல மாற்றங்களையும் வியப்புகளையும் எதிர்பார்க்க முடியும் என்று அவர்கள் கூறினர்.

'பொய்யாகும் கணிப்புகள்'

அறிவியல் வல்லுநர்கள் கொவிட்-19 கிருமி பற்றி கடந்த 20 மாதங்களில் போதிய அளவுக்குப் புரிந்துகொண்டு இருப்பதாகத் தெரியவில்லை. கொரோனா தொற்று சென்ற ஆண்டு தலைகாட்டியபோது அந்தக் கிருமி பற்றி பல கணிப்புகள் இடம்பெற்றன.

"அந்தக் கிருமி பற்றியும் அது எப்படி எப்படியெல்லாம் பரவும் என்பது குறித்தும் பலவும் நமக்குத் தெரிந்ததாக நினைத்தோம். ஆனால் அவை எல்லாமே பொய்யாகி விட்டன," என்று தேசிய தொற்றுநோய் நிலையத்தின் நிர்வாக இயக்குநர் லியோ யீ சின் தெரிவித்தார்.

"தொடர்ந்து பல நிலவரங்களும் மாறிவரும். ஆகையால் ஒரே திட்டமே தொடர்ந்து பலனளிக்கும் என்று நம்ப முடியாது. கிருமி தொடர்ந்து பரிணமித்து நம்முடைய வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்," என்றார் அவர்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஏற்பாடு செய்த இணையக் கருத்தரங்கில் பேராசிரியர் லியோ பேசினார்.

இதே கருத்தையே அந்தக் கருத்தரங்கில் பேசிய டியுக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளி பேராசிரியர் ஊய் எங் யோங்கும் பகிர்ந்துகொண்டார். கொவிட்-19 கிருமி தொடர்ந்து பரிணமித்து இன்னும் அதிக ஆற்றலுடன் தொடர்ந்து இருந்து வரும் என்று அவர் கருத்துரைத்தார்.

கிருமித்தொற்றைத் தடுப்பதற்கான விதிமுறைகளில் எவற்றைக் கைவிடலாம், எவை நிரந்தரமானவையாகும் என்பதை எடுத்துக்கூறும்படி அந்தக் கருத்தரங்கில் வல்லுநர்களிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த வல்லுநர்கள், முகக்கவசம் அணியும் விதி தொடர்ந்து இருந்து வரும் வாய்ப்பு குறைந்தபட்சம் இப்போதைக்கு இருப்பதாகத் தெரிவித்தனர்.

ஏராளமான அம்சங்கள் புரியாமல் இருக்கின்றன என்று பேராசிரியர் லியோ குறிப்பிட்டார். இன்று கணிப்பது ஆறு மாதம் கழித்து முற்றிலும் பொய்யாகிவிடக்கூடிய சூழ்நிலை இருக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.