கோல்கத்தா: உடற்தகுதி இல்லாத ஹார்திக் பாண்டியாவை (படம்) டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியில் தேர்வு செய்தது ஏன் என்று இந்திய அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளரும் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவருமான சையது சபா கரீம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள பாண்டியா, அண்மையில் அவ்வணி ஆடிய இரு போட்டிகளிலும் களமிறங்கவில்லை.
பாண்டியாவால் எப்போது ஒரு போட்டியில் விளையாட முடியும் என உறுதியாகக் கூற இயலாது என்று அவ்வணியின் பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளரான ஷேன் பாண்ட் தெரிவித்துள்ளார்.
சென்ற ஆண்டு முதுகில் அறுவை சிகிச்சை செய்துகொண்டபின், சில மாத ஓய்விற்குப் பின் அணிக்குத் திரும்பினார் பாண்டியா. இருப்பினும், ஆல்ரவுண்டரான இவருக்குப் போட்டிகளில் பந்துவீச அரிதாகவே வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், "பாண்டியா இந்திய அணிக்கு முக்கியமானவர் என்பதில் ஐயமில்லை. ஆனால், அணிக்குத் தேர்வுசெய்தபோது அவர் உடற்தகுதியுடன் இருந்தாரா என்பதுதான் எனது கேள்வி. அப்படி உடற்தகுதியுடன் இருந்திருந்தால் இன்னும் ஐபிஎல் போட்டிகளில் களமிறங்காமல் இருப்பது ஏன்?" என்று சபா கரீம் கேட்டுள்ளார்.
உலகக் கிண்ண 'சூப்பர் 12' சுற்றில், 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, அக்டோபர் 24ஆம் தேதி தனது முதல் ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானுடன் பொருதவிருக்கிறது.

