கொழும்பு: அடுத்த மாதம் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதிவரை டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிலும் ஓமானிலும் நடக்கவுள்ளன.
இந்நிலையில், அதற்கான தகுதிச்சுற்று ஆட்டங்களில் இலங்கை அனியின் ஆலோசகராகச் செயல்படவிருக்கிறார் அவ்வணியின் முன்னாள் தலைவர் மகேலா ஜெயவர்தனே (படம்).
ஒருநாள் போட்டிகளில் ஒருமுறை உலகக் கிண்ணம் வென்ற பெருமைக்கு உரிய இலங்கை அணி, இம்முறை டி20 உலகக் கிண்ணத்தின் 'சூப்பர் 12' சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெற முடியவில்லை.
இதையடுத்து, தகுதிச்சுற்றில் அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகளை எதிர்த்தாடி வென்று, 'சூப்பர் 12' சுற்றுக்குள் நுழைய வேண்டிய நெருக்கடியில் அவ்வணி இருக்கிறது. அக்டோபர் 17ஆம் தேதி தகுதிச்சுற்று ஆட்டங்கள் தொடங்கவுள்ளன.
டி20 உலகக் கிண்ணத்திற்குப்பின் 19 வயதிற்குட்பட்டோர்க்கான இலங்கை அணியின் ஆலோசகராகச் செயல்படவும் ஜெயவர்தனே ஒப்புக்கொண்டுள்ளார். வெஸ்ட் இண்டீசில் நடக்கவிருக்கும்
19 வயதிற்குட்பட்டோர்க்கான உலகக் கிண்ணப் போட்டிகளுக்குத் தயாராக இவர் இலங்கை அணிக்கு உதவுவார்.
இப்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுநராக ஜெயவர்தனே செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

