இருபது ஆண்டுகளாக சிறையில் இருந்த ஃபின்லாந்து ஆடவர் ஒருவர், விடுதலையானதும் புதுமையான ஓர் இடத்தை வடிவமைத்தார். 'ரேஜ் ரூம்' (Rage Room) எனப்படும் அந்த இடத்திற்குச் செல்பவர்கள், அங்குள்ள வீட்டுப் பொருட்கள் அனைத்தையும் எப்படி வேண்டுமானாலும் அடித்து நொறுக்கலாம்.
மக்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தும் ஓர் இடமாக இது இருக்கட்டும் என்கிறார் முன்னாள் குண்டர் கும்பல் உறுப்பினராக இருந்த 44 வயது ஜானி ரனினன்.
தம் வாடிக்கையாளர்களில் 80 விழுக்காட்டினர் பெண்கள் என்றும் ஜானி பகிர்ந்துகொண்டார். கோபத்தை வெளிப்படுத்துவது ஃபின்லாந்தில் அதிகம் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், பெண்கள் இந்த இடத்தை நாடி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
நண்பர்களிடமிருந்து கடன் வாங்கிக் கடந்த மாதம் இவர் திறந்த இந்த இடத்திற்கு அமோக வரவேற்பு.
"நான் சிறையில் இருந்த இளமைக் காலத்தில் இதுபோன்ற அறை எனக்கு உதவி இருக்கும்," என்றார் ஜானி. கோபத்தைக் கட்டுப்படுத்த பல வழிகள் உண்டு என்றும் இந்த இடமும் அதில் ஒன்று என்றும் கூறிய ஜானி, மனநல நிபுணரிடம் பேசுவது நீண்டகாலப் பலனைத் தரும் என்றார்.
சிங்கப்பூரிலும் இதுபோன்ற இடம் உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா?
சிங்கப்பூரில் கடந்த நான்கு ஆண்டுகளாக மெக்பர்சன் சாலையில் 'தி ஃபிரக்மண்ட் ரூம்' (The Fragment Room) செயல்பட்டு வருகிறது.
மன உளைச்சலால் பாதிக்கப்படுவோர், இந்த இடத்தை நாடி வரலாம் என்கிறார் அதன் நிர்வாகி இயன் சூ.
"சிங்கப்பூரில் மன உளைச்சலால் பாதிக்கப்படுவோர் ஏராளமானோர் உள்ளனர். இங்கு வருவோரில் பெரும்பாலானோர் 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட இளையர்கள். ஆயினும், நடுத்தர வயதினர், முதியவர்கள் சிலரும் வருகின்றனர்," என்று அவர் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
கண்ணாடிப் பொருட்கள், புட்டிகள், தட்டுகள் போன்றவற்றை இங்கு உடைக்கலாம். அத்துடன் சற்று கூடுதல் கட்டணத்தில் தொலைக்காட்சி, அச்சு இயந்திரம் போன்ற மின்னியல் பொருட்களையும் அடித்து நொறுக்கலாம் என்றார் அவர்.
நொறுங்கிக் கிடப்பனவற்றை என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது அவற்றில் கிட்டத்தட்ட 80 முதல் 90%, மறுபயனீடு செய்யப்படும் என்றார் இயன் சூ.
இந்த இடத்திற்கு வருபவர்கள் குறைந்தது 18 வயது இருக்க வேண்டும். இருப்பினும், பெற்றோருடன் 13 வயதுக்கு மேற்பட்டவர்களும் அனுமதிக்கப்படுவர் என்றார் அவர்.
இந்த இடத்திற்கு வந்த ஆக மூத்த வாடிக்கையாளரின் வயதையும் நாங்கள் அறிந்துகொள்ள விரும்பினோம்.
"அவருக்கு என்ன வயது என்று தெரியாது. பார்ப்பதற்கு தமது 60களில் இருந்தார். ஆனால் அவரின் உற்சாகத்தைக் கண்டு நாங்கள் வியந்து போனோம்," என்றார் இயன் சூ.
கொவிட்-19 சூழலில் பலரும் இவரது இடத்தை நாடி வருவதாகக் குறிப்பிட்டவர், பெண்களின் எண்ணிக்கை ஆண்களைக் காட்டிலும் அதிகம் என்பதையும் பகிர்ந்துகொண்டார்.
கூடுதல் செய்தி: கி. ஜனார்த்தனன்

