தாய்ப்பால், தொப்புள்கொடி, பல் போன்றவற்றைக் கலைநயத்துடன் அணிகலன்களாக மாற்றும் திறமை கொண்டவர் தாரிக்கா சல்மான். 23 வயதுடைய இவர், தமிழ்நாட்டின் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
குழந்தை தொடர்பான நினைவுப் பொருட்களை உருவாக்கும் இவர், பெற்றோர் பலரது மனதை உறைய வைத்துள்ளார்.
ஆங்கில இலக்கியத் துறையில் பட்டம் பெற்ற தாரிக்கா, தாய்ப்பால் ஆலோசகர் படிப்பையும் முடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் இருந்த தன் உறவினர், முத்து மாதிரியான மோதிரம் ஒன்றை அணிந்திருந்தபோது அது என்ன என்று தாரிக்கா கேட்க, அது தாய்ப்பாலில் செய்தது என்றார் அந்த உறவினர்.
தாரிக்கா கருவுற்றபோது தாய்ப்பாலில் அணிகலன் செய்யும் முறையைத் தேடிக் கண்டுபிடித்து ஆராய்ந்தார். பின், குழந்தை பிறந்ததும் தாய்ப்பாலில் செய்யப்பட்ட நாணயத்தைத் தன் கழுத்தில் அணிந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
விடுப்பு முடிந்து கல்லூரிக்குத் திரும்பிய தாரிக்காவிடம் அவரின் நண்பர்கள் அந்த நாணயத்தைப் பற்றி கேட்டனர். அவர்களும் பின்னர் தாரிக்காவின் சேவையை நாடத் தொடங்கினர்.
தாரிக்காவின் வியாபாரம் அப்படித்தான் தொடங்கியதாக அவர் பகிர்ந்துகொண்டார். தற்போது இதன் செய்முறைக்கான காப்புரிமை கேட்டு விண்ணப்பித்திருப்பதாக அவர் கூறினார்.
பெண்கள் தாய்ப்பால் புகட்டுவதை ஒரு கட்டத்தில் நிறுத்திவிட்டாலும் இது போன்ற தாய்ப்பால் நகைகள் அந்த நினைவுகளை என்றுமே சுமப்பதாக தாரிக்கா குறிப்பிட்டார்.
தனக்குக் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வருகை தரும் ஏழைத் தாய்மார்களுக்கு உதவி செய்வதெற்கென ஒதுக்குவதாகவும் தாரிக்கா பகிர்ந்துகொண்டார்.

