செய்திக்கொத்து

3 mins read

பாதுகாப்பான பயண ஏற்பாடு: சிங்கப்பூர்-அமெரிக்கா முயற்சி

தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயண எற்பாடு ஒன்றை இந்த ஆண்டு இறுதிக்குள் நடப்புக் கொண்டு வருவதன் தொடர்பில் சிங்கப்பூரும் அமெரிக்காவும் செயல்பட்டு வருவதாக வர்த்தக தொழில் அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்தார்.

அமைச்சர், வியாழக்கிழமை வாஷிங்டனில் அமெரிக்க வர்த்தக சபை பிரமுகர்களிடையே உரையாற்றினார். ஜெர்மனி, புருணை நாடுகளுடன் கூடிய இத்தகைய பயண ஏற்பாடு வெற்றி பெற்று இருப்பதை அடுத்து சிங்கப்பூர் அடுத்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த வேலை அனுமதிதாரர்கள் அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூருக்கு வந்து செல்ல ஏதுவாக தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் முழு மூச்சுடன் செயல்பட முடியும் என்றும் திரு கான் குறிப்பிட்டார்.

அமைச்சர் நான்கு நாள்கள் பயணம் மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ளார்.

கொவிட்-19: புதிய தொற்று எண்ணிக்கை 3,483 ஆகியது

சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று காரணமாக புதிதாக மூவர் மரணமடைந்ததாக வியாழக்கிழமை இரவு சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களுக்கு வயது 57 முதல் 90 வரை. இருவர் ஆடவர்கள், ஒருவர் மாது. இரண்டு பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்.

அந்த மூவருக்கும் ஏற்கெனவே மருத்துவப் பிரச்சினைகள் இருந்ததாக அமைச்சு தெரிவித்தது. அந்த மூவரையும் சேர்த்து சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றுக்கு மரண மடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 136 ஆக உயர்ந்துவிட்டது.

வியாழக்கிழமை புதிதாக 3,483 பேர் தொற்றுக்கு ஆளானார்கள். அவர்களில் 2,783 பேர் சமூகத்தொற்றுக்கு ஆளானவர்கள். 692 பேர் வெளிநாட்டு ஊழியர் தங்கு விடுதிகளைச் சேர்ந்தவர்கள். எட்டுபேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். புதிதாக கிருமி தொற்றியோரில் 607 பேருக்கு வயது 60க்கு மேல் என்றும் அமைச்சு கூறியது. சிங்கப்பூரில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 116,864 ஆக உள்ளது.

வியாழக்கிழமை நண்பகல் வாக்கில் 1,534 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மொத்தம் 297 பேருக்கு உயிர்வாயு சிகிச்சை தேவைப்பட்டது. 40 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தனர். மிகவும் பாதிக்கப்பட்டு இருப்போரில் 281 பேர் 60க்கும் அதிக வயதுள்ளவர்கள்.

பூஸ்டர் தடுப்பூசி இப்போது எல்லாருக்கும் தேவை இல்லை

கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசி எல்லாருக்கும் தேவைப்படும் நிலை இப்போது இல்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அறிவியல் வல்லுநர் தெரிவித்தார்.

முதியோர் போன்ற சிலரிடத்தில் நோய் எதிர்ப்பாற்றலை நீண்டகாலத்திற்கு தக்கவைத்துக் கொள்ள பூஸ்டர் தடுப்பூசி உதவும் என்பதை அவர் சுட்டினார்.

சிங்கப்பூர் சுகாதார உயிரியல் மருத்துவப் பேரவையில் உரையாற்றிய டாக்டர் செளமியா சுவாமிநாதன், பூஸ்டர் தடுப்பூசி எந்த அளவுக்கு ஆற்றலுடன் இருக்கிறது என்பதைத் தெரிவிக்கக்கூடிய புள்ளிவிவரங்களில் பெரும்பாலானவை பிரிட்டன், சிலி, இஸ்ரேல் உள்ளிட்ட ஒரு சில நாடுகளைச் சேர்ந்தவையாகத்தான் இருக்கின்றன என்பதை சுட்டினார். இப்போது பயனில் உள்ள தடுப்பூசிகளில் பெரும்பாலானவை கடுமையான பாதிப்புகளில் இருந்து அதிகமான மக்களைக் காத்துவிடும் என்று அவர் தெரிவித்தார். இருந்தாலும் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் சரியில்லாத முதியவர்கள் போன்ற சிலருக்கு பூஸ்டர் ஊசி தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.