அனைவரது கவனத்தையும் தங்கள் வசம் ஈர்க்க வேண்டும் என்பது சிலரது ஆசை. இதைச் சமூக ஊடகங்கள் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்கின்றன. சமூக ஊடகச் சவால்களில் ஒருவரைப் பங்கேற்கச் செய்து தங்களின் புகழை அதிகப்படுத்திக்கொள்கின்றன.
மக்களைச் சென்றடைந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகக் கூறும் கூட்டம் ஒருபுறம், ஆபத்தான சவாலில் பங்கேற்று விபரீதமாக்கும் கூட்டம் மறுபுறம் இருக்கவே செய்கின்றன.
இவ்வாறு வேடிக்கைக்காக ஒரு சமூக ஊடகச் சவாலில் பங்கேற்று, அது பயமுறுத்தும் ஒன்றாக மாறுவதும் உண்டு. 'கொரோனா கிருமி சவால்' என்ற ஒன்று கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. கிருமித்தொற்றின் வீரியத்தை அதிகம் அறியாதோர் அதில் பங்கேற்றனர்.
விமானத்தின் கழிவுத் தொட்டி இருக்கையை ஒரு பெண் தன் நாவினால் நக்கியதுடன் அதைத் தன் டுவிட்டர் கணக்கிலும் பதிவிட்டார்.
உடனே, பலரும் பல இடங்களில் அதே செயலைச் செய்யத் துணிந்தனர். ரயிலில் உள்ள கைப்பிடி, பொது இடத்தில் உள்ள நாற்காலி என எதையும் விட்டுவைக்கவில்லை.
இச்சவாலில் பங்கேற்ற ஒருவர், பின்னாளில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கவும் பட்டார். தங்களுக்குக் கிருமித்தொற்று ஏற்படாது என்று கூறிச் சவாலில் பங்கேற்றவர்களது துணிச்சல் பாராட்டுதலுக்குரியதன்று.
கடந்த ஆண்டு டிக்டாக் தளத்தில் தொடங்கப்பட்ட 'ஸ்கல் பிரேக்கர்' சவாலில் 13 வயது சிறுவனுக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. மூன்று பேர் குதிக்கப் போவதாகக் கூறிய பின்னர், அதில் ஒருவர் குதிக்கும்போது மற்ற இருவரும் குதிப்பவரது கால்களை வாரிவிடுவர். இதனால், குதித்தவர் கீழே விழுந்துவிடுவார். இச்சவால் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் பரவல் ஆனதுடன் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பங்கேற்ற பலருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இத்தகைய காணொளிகளைப் பின்னர் டிக்டாக் அதன் தளத்திலிருந்து அகற்றியும் விட்டது.
பிள்ளைகளின் இணைய நடவடிக்கைகளைப் பெற்றோர் கண்காணிப்பது முக்கியமாகிறது. வருமுன் காப்பதில் தவறேதும் இல்லையே!

