தீபாவளி என்றால் தனி உற்சாகம் வந்துவிடும் என்கிறார் நதியா.
மீண்டும் நடிக்கத் துவங்கிய பிறகு தெலுங்கில் அதிக வாய்ப்புகள் தேடி வருவது மகிழ்ச்சி தருவதாகவும் இப்போதும்கூட சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை தன் நடிப்பை பாராட்டுவது வியப்பளிப்பதாகவும் அண்மைய பேட்டியில் கூறியுள்ளார்.
"முன்பெல்லாம் சென்னையில் உள்ள எனது தோழி திவ்யாவுடன் இணைந்துதான் தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிப்போம். தெருவில் நடந்து செல்பவர்களுக்குப் பின்னால் வெடியைக் கொளுத்திப்போட்டு கலாட்டா செய்வோம்.
"இப்போதும் தீபாவளி கொண்டாடுகிறோம் என்றாலும், சாதாரண வெடிகள் மட்டுமே பயன்படுத்துகிறோம்.
"தமிழை விட தெலுங்கில்தான் அதிக வாய்ப்புகளும் கதாபாத்திரங்களும் அமைகின்றன. அதே சமயம் சென்னைதான் என் மனதுக்கு நெருக்கமான இடம்.
"முன்னணி நடிகையாக இருந்தபோதே திருமணம் செய்துகொண்டு வெளிநாடு சென்றுவிட்டேன். அப்போது தனிமையை உணர்ந்ததால் கல்லூரியில் சேர்ந்து படித்தேன்.
"அதன் பிறகு இரு குழந்தைகளுக்குத் தாயாக அவர்களை வளர்த்தெடுக்கும் பொறுப்பை நிறைவேற்றியுள்ளேன். இப்போது மீண்டும் நேரம் கிடைப்பதால் சினிமாவில் கவனம் செலுத்துகிறேன்.
"எனக்கென தனி அடையாளம், அங்கீகாரம் கொடுத்தது தமிழ் சினிமாதான். அதை வாழ்நாள் முழுவதும் மறக்கவே மாட்டேன்," என்கிறார் நதியா.