முன்னணி நாயகிகள் தம்முடன் இணைந்து நடிக்கத் தயங்குவதாக நடிகர் சந்தானம் கூறியுள்ளார்.
தன்னுடன் இணைந்து நடிக்க முடியுமா என்று எந்த நாயகியிடமும் தாம் இதுவரை கேட்டதில்லை என்கிறார்.
"சந்தானம் நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக மாறியுள்ளார். அவருடன் நடித்தால் நம்முடைய மதிப்பு குறைந்துவிடும் என்று சில நடிகைகள் தயங்குகின்றனர். இப்படிப்பட்ட எண்ணத்துடன் இருப்பவர்களை வற்புறுத்தி நடிக்க வைப்பது சரியாக இருக்காது. அவர்களாக கதை பிடித்திருக்கிறது என்று நடிக்க வந்தால் பிரச்சினை இல்லை.
"எல்லா கதைகளிலும் நடிக்க ஆட்கள் தேவை. எனவே கதாபாத்திரங்களுக்கு ஏற்ற முகங்களை தேடிக் கண்டுபிடிக்கிறோம். அதே சமயம் நான் நடிக்கும் படங்களில் கதாநாயகிகளுக்கு பெரிதாக முக்கியத்துவம் இருப்பதில்லை. இதுவும்கூட முன்னிலை நடிகைகளுக்கு நெருடலாக இருக்கக்கூடும்," என்கிறார் சந்தானம்.
தாம் நாயகனாக நடித்துள்ள பத்து படங்களில் பெரும்பாலானவை வசூல் ரீதியில் வெற்றி பெற்றுள்ளதாக குறிப்பிடுபவர், கதாநாயகனாக நடிக்க தொடங்கிய பிறகு நிறைய இழந்திருப்பதாகச் சொல்கிறார்.
"நான் நாயகனாக நடித்த முதல் படம் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்'. இன்று வரை நாயகன் என்ற பயணம் தொடர்வதில் மகிழ்ச்சி. அதே சமயம் பல போராட்டங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது.
"ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமான அனுபவத்தைத் தருகிறது. கடவுளின் ஆசியால் எனது படங்கள் குறைந்தபட்ச லாபத்தைத் தருகின்றன," என்று சொல்லும் சந்தானம் நடிப்பில் அடுத்து 'சபாபதி' படம் வெளியாகிறது.

