மறுபதிப்பு படங்களில் நடிப்பதை தாம் அறவே விரும்புவதில்லை என்கிறார் சிவகார்த்திகேயன்.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு படங்களை இயக்க வேண்டும் எனும் கனவு தமக்கு இருப்பதாகவும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களில் நடிக்க விரும்புகிறேன். அதே சமயம் மறுபதிப்பு படங்களில் எனக்கு ஆர்வம் இல்லை. காரணம், முதல் பதிப்பில் நடித்துள்ள கதாநாயகர்களின் திறமைக்கு நான் ஈடுகொடுக்க வேண்டியிருக்கும். அது சாத்தியமல்ல.
"உதாரணமாக, அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'வைகுந்தபுரமுலு' தெலுங்குப் படத்தின் மறுபதிப்பில் நடிக்க கேட்டனர். அவரைப் போல் நடனம் ஆட வாய்ப்பே இல்லை. அதனால் மறுத்துவிட்டேன்.
"இதற்கு முன்பு ஒரு கன்னடப் படத்தின் பாடல் காட்சியில் மட்டும் தோன்றி இருக்கிறேன். தமிழ் ரசிகர்கள் எனக்கென ஓர் இடத்தை அளித்துள்ளனர். அதன் மூலம் நான் நடிக்கும் படங்களை இரண்டு அல்லது மூன்று மொழிகளில் வெளியிட முடியும். அதே சமயம் நேரடியாக பிற மொழிப் படங்களில் நடிப்பது ஒரு சவால்தான்.
"அவ்வாறு நான் நடிக்கத் தொடங்கும்போது சினிமா குறித்த எனது பார்வையும் அணுகுமுறையும் நிச்சயம் மாறும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இயக்குநராக உருவெடுப்பதற்குத் தேவையான தகுதிகளை வளர்த்துக்கொள்வேன்.
"இயக்குநராகப் பணியாற்ற கடுமையாக உழைக்க வேண்டும் என்பது தெரியும். இன்றைய சூழ்நிலையில் நான் அதற்குத் தயாராகவில்லை. எனினும், இயக்குநராக வேண்டும் என்ற கனவு எத்தனை ஆண்டுகள் கடந்து போனாலும் மனதில் பதிந்திருக்கும்," என்கிறார் சிவகார்த்திகேயன்.
பக்கத்து வீட்டுப் பையன் என்று தம்மைக் குறிப்பிடுவதை ரசித்து வரவேற்பதாக குறிப்பிடுபவர், அதுபோன்ற கதாபாத்திரங்கள்தான் தமக்கு ஒத்துவரும் என்கிறார்.
ரசிகர்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக தம்மை ஏற்றுக்கொண்டிருப்பது நெகிழ வைப்பதாகவும் சொல்கிறார்.
"பக்கத்து வீட்டுப் பையன் என்ற பெயர் என்னைக் கைவிட்டுப் போகக்கூடாது என விரும்புகிறேன். அதற்காக எத்தனை காலத்துக்குத்தான் ஒரே மாதிரியாக நடிக்க முடியும் எனும் கேள்வி எழக்கூடும்.
"என்னைப் பொறுத்தவரை இப்போது வரை அதற்கான அவசியம் எழவில்லை. நான் வெற்றி பெற்றால் மகிழும் ரசிகர்கள், என் படங்கள் தோல்வி அடைந்தால் வருத்தப்படுகிறார்கள்.
இது ஒன்றே நான் அவர்களுடைய குடும்பத்தில் இருக்கிறேன் என்பதற்கான ஆதாரம். இதை இழக்க விரும்பவில்லை. மற்ற அனைத்தையும் விட ரசிகர்களின் இந்த பாசமும் அக்கறையும் மிகப் பெரியது," என்கிறார் சிவகார்த்திகேயன்.
கொரோனா கிருமித்தொற்று நெருக்கடியால் திரைஉலகம் பாதிக்கப்பட்டுள்ளது வருத்தம் அளிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், தொற்று கட்டுக்குள் வந்ததும் திரையுலகம் எழுச்சி பெறும் என்றும் அப்போது இளையர்க ளுக்கு பரவலாக வாய்ப்பு கிடைக்கும் என்றும் சொல்கிறார்.

