நினைவாற்றலால் சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற இஷானி சண்முகம்

நினைவாற்றலால் சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற இஷானி சண்முகம்

3 mins read

ஆறு வயது இஷானி சண்முகம் 'பை' என்ற சிறப்பு எண்ணின் ஆக அதிக தசம எண்களை (most decimal places) மனப்பாடம் செய்து சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் முன்பிருந்த சாதனையை முறியடித்து தேசிய சாதனை படைத்திருக்கிறார். அதற்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

திரு சண்முகம் - வெண்ணிலா முனுசாமி தம்பதியினரின்

6 வயது மகள் இஷானி. இவர் 'பிசிஎஃப் ஸ்பார்கல்டாட்ஸ்' பாலர் பள்ளியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

பிறந்து ஒன்றரை வயதில் எதைப் பார்த்தாலும் உடனே அதன் பெயரைச் சொல்லிவிடும் பழக்கம் கொண்டவர் இவர். அபார நினைவாற்றலுடன் இருப்பதை அறிந்தனர் பெற்றோர்.

அவருக்கு பழங்கள், நிறங்கள் ஆகியவற்றை ஓரிரெண்டு முறை சொல்லிக் கொடுத்தாலே உடனே சட்டென்று பெயர்களைச் சொல்லி பெற்றோரை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார் இஷானி. மகளின் நினைவாற்றலை வெளிக்கொண்டுவர பெற்றோர் முடிவு செய்தனர்.

அடுத்த நடவடிக்கையாக உலக நாடுகளின் கொடிகள், நாடுகள் ஆகியவற்றைக் கொண்ட அட்டைகளைக் காட்டி அவருடைய தனித்துவமான திறமையை வளர்க்கத் தொடங்கினர்.

வளரும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கிணங்க அவர் இரண்டரை வயதிலேயே சுமார் 190 நாடுகளின் கொடிகள், நாடுகள் ஆகியவற்றை விரைவாகச் சொல்லத் தொடங்கினார்.மேலும் அவரின் திறமையை வளர்க்க நினைத்த பெற்றோர் நாடுகளின் பெயர்களைத் தொடர்ந்து மகளை கணிதத்தில் ஈடுபட வைத்தனர்.

அவருக்கு ஏற்கெனவே கணிதத்தில் அதிக ஆர்வம் இருந்ததால் 'பை' (π) என்ற சிறப்பு எண்ணின் ஆக அதிக தசம எண்களை நினைவுபடுத்திச் சொல்ல, பயிற்சி அளித்தனர். இஷானியும் ஆர்வத்துடன் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். சுமார் மூன்று மாதங்களில் 409 இலக்கங்களை நினைவில் வைத்துக்கொள்ளும் திறனைப் பெற்றார்.

சென்ற ஆண்டு செப்டம்பரில் முதன் முதலாக சிங்கப்பூர் சாதனைப் புத்தக அமைப்பிலிருந்து வந்தவர்கள் முன் இஷானி தன்னுடைய நினைவாற்றல் திறனை வெளிப்படுத்தி சாதனை படைத்தார்.

அந்த சாதனை நிகழ்த்தியது முதல் இஷானிக்கு அவர் மீது அதிக தன்னம்பிக்கை வரத்தொடங்கியது. "நம்பிக்கையுடன் மேலும் அதிக எண்களை நான் படிக்கலாமா?" என்று கேட்ட இஷானியை உற்சாகப்படுத்தி மேலும் பயிற்சி கொடுக்கத் தொடங்கினர் அவரின் பெற்றோர்.

இதுவரை 1505 இலக்க எண் சாதனைதான் சிங்கப்பூரில் இருந்திருக்கிறது. அதை இரண்டு பெரியவர்கள் செய்திருக்கிறார்கள். இதுபற்றி இஷானியிடம் சொன்னபோது அதைவிட நான் அதிகமாக செய்து அந்த சாதனையை முறியடிக்க விரும்புகிறேன் என்று ஆர்வத்துடன் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். பெற்றோரும் தொடர்ந்து பயிற்சி கொடுத்தனர்.

இறுதியாக இம்மாதம் 13ஆம் தேதி இஷானியின் இல்லத்திலேயே போட்டி நடைபெற்றது. அப்போது இஷானி மிகவும் நிதானமாக இருந்ததாகவும் பயம் இல்லாமல் 10 நிமிடம் 15 விநாடிகளில் 1560 இலக்கங்களைக் கூறி முந்தைய சிங்கப்பூர் சாதனையை முறியடித்திருக்கிறார்.

அந்த எண்களை நகல் எடுத்து வந்திருந்த சிங்கப்பூர் சாதனைப் புத்தக அமைப்பினர் இஷானி சொல்லச் சொல்ல சரிபார்த்து அவருக்குப் பாராட்டுத் தெரிவித்து சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர். இரண்டாம் முறையாக சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தார் இஷானி.

'பை' (π) எண்களை சொன்னதில் இவர்தான் இளம் வயது சாதனையாளர் என்ற பெயரைத் தட்டிச் சென்றுள்ளார். மேலும் இந்த 'பை' (π) எண்கள் நினைவாற்றல் சாதனையில், சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இவர் பெயர்தான் முதல் இடத்தில் இருக்கிறது என்பதைப் பெற்றோர் பெருமையுடன் கூறினர்.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் 118 ரசாயனக் கூறுகளின் சின்னங்களை வைத்தே அதன் பெயரை குறைந்த நேரத்தில் கண்டுபிடித்து சொல்லியிருக்கிறார். இந்தியாவின் உலக சாதனையாளர் பட்டியலில் இவரின் பெயரைச் சேர்த்து அதற்கான சான்றிதழையும் கொடுத்து கௌரவித்தது அந்த அமைப்பு.

இந்த இளம் வயதிலேயே தமிழ் இனத்திற்குப் பெருமை சேர்த்து இருக்கிறார் இஷானி சண்முகம். தங்கள் மகளின் திறமையைக் கண்டு அதை மேலும் மெருகேற்றிய அவரின் பெற்றோர்

திரு சண்முகம்,

திருமதி வெண்ணிலா முனுசாமிக்கும் சிறுமி இஷானிக்கும் பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.