தன்மீது நம்பிக்கை கொண்டவர்கள் யாரும் வீழ்வதில்லை. எத்தனை பேர் மட்டம் தட்டிப் பேசினாலும் தன் மீது நம்பிக்கை இருக்கிறது என்று ஆணித்தரமாக நம்பி வாழ்ந்தவர்கள் பலர். அவர்களில் அமெரிக்க அதிபர் ஆப்ரஹாம் லிங்கனும் ஒருவர்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் உரைநிகழ்த்திக் கொண்டிருந்தார். அப்போது அவரை மட்டம்தட்டும் நோக்கில் எதிர்க்கட்சியில் இருந்தவர் எழுந்து, "ஆப்ரஹாம், உங்கள் தந்தை தைத்துக்கொடுத்த செருப்பு இன்னும் என் காலை அலங்கரித்துக்கொண்டு இருக்கிறது," என்றார்.
காரணம் நீங்கள் இன்று அதிபராக இருந்தாலும் உங்களின் தந்தை செருப்பு தைப்பவர் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்துவதற்காக அவர் அவ்வாறு பலர் முன்னிலையில் கூறினாராம்.
அதற்கு ஆப்ரஹாம் சிறிதும் வருத்தமோ அவமானமோ படாமல் சிரித்தபடி, "நண்பரே! என் தந்தை இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இருப்பினும் அவர் தைத்துக் கொடுத்த செருப்பு உங்களின் காலை இன்னும் அலங்கரித்துக்கொண்டு இருக்கிறதென்றால், அது அந்த அளவுக்கு நேர்த்தியாகத் தைக்கப்பட்டுள்ளது.
"இருப்பினும் அவர் தைத்துக் கொடுத்த செருப்பில் ஏதேனும் பழுது ஏற்பட்டிருந்தால் அதை என்னிடம் கொடுங்கள். நான் அதை உங்களுக்குச் சரி செய்து தருகிறேன். எனக்கு செருப்பு தைக்கவும் தெரியும். நாட்டை ஆளவும் தெரியும்!" என்று பதில் உரைத்தாராம்.
தன்னம்பிக்கை, விடாமுயற்சி இவைகளில் இருந்து பெற்ற ஏழ்மையின் அனுபவ அறிவுக்கு நிகராக வேறெதுவும் போட்டியிட முடியாது. பதவியில் இருக்கும் போதும் அவமானப்படுத்திய நபர் மீது கோபம் கொள்ளாமல், தன் அதிகாரத்தையும் காட்டாமல் புத்திசாலித்தனமாக பணிவோடு பதில் அளித்தே அவமானப் படுத்தியவரை தலைகுனியச் செய்தார் லிங்கன்.
இந்த பக்குவமான மனதாலும் விடாமுயற்சியாலும் தான் பல தோல்விகளுக்குப் பின்னர் அமெரிக்காவின் அதிபராகி அடிமைத்தனத்திற்கு எதிராக குரல் கொடுத்தார்.
இதைத்தான் கண்ணதாசனும் 'நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்,' என்று ஒரு பாடலில் கூறியிருப்பார். இன்றும் பல உயிர்கள் வணங்குகின்றன லிங்கனை.
வெற்றி எனும் உயரத்தை அடைய ஏணியாக இருக்கும் ஆயுதம்தான் தன்னம்பிக்கை! அதை எப்போதும் வளர்த்துக்கொள்ளவேண்டும்.

