மினுமினுப்பான மஞ்சள் உடலில் அழகிய கோடுகள், உறுதியான மெத்தைபோன்ற பாதம், வெள்ளை நிற மீசையைக் கொண்ட அழகிய புலிகளைப் பலர் வேட்டையாடி வருகின்றனர். அதனால், அவை அழிந்து வரும் விலங்கு இனங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
காட்டுக்கு அரசன் சிங்கம் என்றாலும் வனத்திற்குள் கம்பீரமாகத் தனி நடைபோட்டு வாழ்ந்து வரும் ஓர் இனம் புலி. நம் முன்னோர்கள் புலிகளை நேரடியாகப் பார்த்திருப்பார்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் இவற்றை விலங்கியல் தோட்டத்திலும் தொலைக்காட்சியிலும்தான் பார்க்க முடியும்.
இவை காடுகளில் தனிமையில் வாழ்வதைப் பெரிதும் விரும்பும். முக்கியமாக, ஆண் புலிகள் தனியாகத்தான் வாழும், வேட்டையாடும்.
உலகிலேயே புலிகள் அதிக அளவில் வாழும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. புலிகள் 20 முதல் 26 ஆண்டுகள் வரை உயிர் வாழும். இவை 70 முதல் 120 சென்டிமீட்டர் உயரம் கொண்டவை. ஆண் புலிகள் 90 முதல் 310 கிலோ எடையுடனும் பெண் புலிகள் 65 முதல் 170 கிலோ எடையுடனும் இருக்கும்.
பெண் புலி 16 வாரங்களில் கர்ப்பகாலம் முடிந்து இரண்டு முதல் ஆறு குட்டிகள் வரை ஈன்றெடுக்கும். மணிக்கு 49 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்லும். பத்து மீட்டர்வரை உயரம் தாண்டும். சிங்கங்களைப் போன்று கூட்டமாக இல்லாமல் தனியாகவே வேட்டையாடும்.
ஒரே நேரத்தில் 18 கிலோ இறைச்சியை உண்ணும்; வெகுநாள்கள் பசி தாங்கும். சிங்கத்தையும் வீழ்த்தும் ஆற்றல் படைத்த புலி, மனிதனைவிட ஆறு மடங்கு கூர்மையான ஆற்றல் கொண்டது. ஏறத்தாழ 48 கிலோமீட்டர் பரப்பளவைப் தனது எல்லையாக வகுத்துக்கொண்டு வாழும்.
புலிகளைப் பாதுகாக்கும் நோக்கத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 29ஆம் தேதியை அனைத்துலகப் புலிகள் தினமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு ஜூலை 29ஆம் தேதி உலகப் புலிகள் தினத்தை முன்னிட்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி உலகில் 3,900 புலிகள் மட்டுமே எஞ்சியிருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கு முக்கியக் காரணம், காடுகளை அழிப்பதுதான். புலிகளின் தோல், நகம், இறைச்சி ஆகியவற்றுக்காக அவை வேட்டையாடப்படுகின்றன.
அந்தக் காலகட்டத்தில் செல்வந்தர்கள் புலியை வேட்டையாடுவதை தங்களது பொழுதுபோக்காகக் கொண்டிருந்தார்கள். புலியைக் கொன்ற ஒருவன், சமூகத்தில் பெரிய வீரனாக மதிக்கப்பட்டான். அதற்காகப் பலரும் புலிகளை வேட்டையாடினார்கள்.
புலிகளின் வாழ்விடங்களை அழித்து, அவற்றை மனிதர்கள் தங்களுக்குப் பொருத்தமான வாழ்விடங்களாக மாற்றுவதால் அவை வாழ இடம் இல்லாமல் அழிந்து போகின்றன என்பதுதான் உண்மையான காரணம்.


