நீதானா அந்த மாணவன்!

நீதானா அந்த மாணவன்!

2 mins read
e6c20cfa-6fae-4707-9524-4529def8c098
-

ராமு ஒருநாள் வழியில் தன்னுடைய தொடக்கப் பள்ளி ஆசிரியரைச் சந்தித்தான். அவர் வயதாகி, தள்ளாடி தள்ளாடி நடந்து சென்றுகொண்டு இருந்தார்.

அவரை அணுகி, "ஆசிரியரே! என்னை உங்களுக்குத் தெரிகிறதா? என்னால் உங்களை மறக்கவே முடியாது. நீங்கள்தான் என் வாழ்க்கையில் நல்லொழுக்கத்தைக் கற்றுத் தந்தீர்கள்.

"ஒருமுறை நான் வகுப்பில் ரவியின் கைபேசியைக் களவாடிவிட்டேன். நீங்கள் எங்கள் அனைவரின் கண்களையும் கட்டிவிட்டு அனைவரது புத்தகப் பைகளையும் எடுத்துச் சென்று கைபேசி இருக்கிறதா என்று தேடினீர்கள். அப்போது நான் நடுங்கிப்போய் நின்றேன்.

"நீங்களோ, "இதோ அந்தக் கைபேசி," என்று அதை ரவியிடம் கொடுத்துவிட்டு பள்ளிக்கு இனி கைபேசியை எடுத்து வரக்கூடாது என்று கண்டித்தீர்கள்.

"ஆனால் நானோ நேரப்போகும் அவமானத்தை எண்ணி உள்ளூர பயந்தபடி இருந்தேன். நீங்களோ என்னை சக மாணவர்களிடம் காட்டிக் கொடுத்து அவமானப்படுத்தவில்லை. அதன் பிறகும்கூட என்னை வித்தியாசமான முறையில் நடத்தவும் இல்லை. அது என்னை மிகவும் பாதித்தது. அன்றுமுதல் நான் நல்லொழுக்கத்துடன் வாழக் கற்றுக் கொண்டேன்," என்று சொல்லி முடித்தான்.

அதைக் கேட்ட ஆசிரியர், "அடடே! நீதான் அந்த கைபேசியை எடுத்தாய் என்று எனக்கும் தெரியாது. ஏன் என்றால் நானும் அனைவரின் பைகளையும் ஒன்றாகக் குவித்து வைத்துத் தேடினேன். யாருடையது எந்தப் பை என எனக்கும் தெரியாது.

"ஒவ்வொருவரிடமும் தனித்தனியே தேடியிருந்தால் நீ பிடிபட்டு இருப்பாய். பிறகு உன்னை நான் பார்க்கும் நேரங்களில் எல்லாம் அந்த நிகழ்வு நினைவிற்கு வரும். உன்னைப் பற்றிய தவறான எண்ணம் என்னில் வளர்ந்து கொண்டே இருக்கும். நானும் தவறாக உன்னை வழிநடத்தக்கூடும். அது உன் எதிர்காலத்தையும் பாதித்து விடலாம்.

"அதனால்தான் கைபேசியைத் தேடும்போது அவ்வாறு செய்தேன். அதன் பிறகு நீங்கள் எல்லாரும் அவரவர் பைகளை எடுத்துச் சென்றீர்கள். நானும் யார் யார் எந்தப் பையை எடுக்கிறார்கள் என்று கவனிக்காமல் வெளியே சென்றுவிட்டேன்," என்றார்.

அதைக் கேட்ட ராமுவின் கண்கள் கண்ணீரைச் சொரிந்தன.