இங்கிலிஷ் பிரிமியர் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட், லிவர்பூல் குழுக்கள் மோதுகிறது என்றாலே ரசிகர்கள் கைகளை பிசையாத குறையாக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கிடப்பர். அதற்கேற்றாற்போல் அவ்விரு அணிகளும் சளைக்காமல் விளையாடி வெல்வது எந்தக் குழு என்பது இறுதிவரை கூறமுடியாதபடி விளையாடும்.
ஆனால், ஞாயிறன்று நடைபெற்ற போட்டி மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்கள் தலையைத் தொங்கப்போடும் அளவுக்கு மிக மோசமாக இருந்ததுடன் யுனைடெட் குழு 0-5 என்று பரிதாபமாக தோற்கும் அளவுக்கு இருந்தது.
இதைத் தொடர்ந்து குழுவின் நிர்வாகி ஒலே குனார் சோல்சியார் உடனடியாக நீக்கப்பட்டு புதிய நிர்வாகி வருவார் எனப் பலரும் எதிர்பார்த்திருந்தனர். எனினும், இந்த படுமோசமான தோல்விக்குப் பிறகும் மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் நிர்வாக சபை சோல்சியாரை உடனடியாக நீக்கவில்லை.
தற்போதைய நிலையில், மான்செஸ்டர் யுனைடெட் ஸ்பர்ஸ், சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அட்டலான்டா, பின்னர் மீண்டும் பிரிமியர் லீக்கில் மான்செஸ்டர் சிட்டி என ஒன்றன்பின் ஒன்றாக மூன்று முக்கிய ஆட்டங்களில் விளையாட உள்ளது. இதில் ஏதாவது ஒன்றில், குறிப்பாக அடுத்து விளையாடப்போகும் ஸ்பர்ஸ் குழுவிடம், யுனைடெட் தோற்குமானால், சோல்சியாரின் தலை உருளுவது நிச்சயம் என்ற
பேச்சு அடிபடுகிறது.

