செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
Google News Preferred Icon

புதிய தொற்று குறைந்தது

சிங்கப்பூரில் 62 முதல் 98 வயதிற்குட்பட்ட மேலும் 15 பேர் கொவிட்-19 தொற்று காரணமாக வியாழக்கிழமை மாண்டு விட்டனர். அவர்கள் அனைவர்க்கும் வேறு உடல்நலக் குறைபாடுகளும் இருந்ததாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களையும் சேர்த்து மரணமுற்றோர் எண்ணிக்கை 364 ஆனது.

தொடர்ந்து 39வது நாளாக கொரோனா தொற்றால் மரணம் நிகழ்ந்துள்ளது. புதிதாக 3,432 பேரை கொரோனா தொற்றி இருப்பதை அமைச்சு உறுதிப்படுத்தியது. இது, அதற்கு முந்தைய நாளைக் காட்டிலும் 1,892 குறைவு. முன்னர் இல்லாத அளவாக புதன்கிழமை 5,324 கொரோனா பாதிப்புகள் பதிவாயின.

புதிதாக கிருமி தொற்றியோரில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 3,171 பேரும் வெளிநாட்டு ஊழியர் விடுதிகளைச் சேர்ந்த 252 பேரும் வெளிநாட்டிலிருந்து வந்த ஒன்பது பேரும் அடங்குவர். சமூகத் தொற்றுக்கு ஆளானவர்களில் 545 பேருக்கு வயது 60க்கும் மேல் என்றும் அமைச்சு குறிப்பிட்டது. சிங்கப்பூரில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 187,851 ஆனது.

டாக்சி, வாடகை கார் ஓட்டுநருக்கு வாராவாரம் பரிசோதனை

சிங்கப்பூரில் டாக்சி, வாடகை கார் ஓட்டுநர்கள் அனைவரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் வாராவாரம் கொவிட்-19 பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தள்ளது.

நடைமுறை வசதிக்காக அவர்கள் சுய ஏஆர்டி விரைவுப் பரிசோதனை செய்துகொள்ளலாம். ஓட்டுநர்களுக்கு சுயபரிசோதனைக் கருவிகள் கொடுக்கப்படுகின்றன.

இத்தகைய ஓட்டுநர்களுக்குக் கட்டாய பரிசோதனை ஏற்கெனவே ஏன் நடப்புக்கு வரவில்லை என்பதை ஆணையம் விளக்கியது. இத்தகைய வாகன ஓட்டுநர்கள் சுயமாக வேலை பார்க்கிறார்கள். அவர்களுக்கு வேலை நேரமும் மாறி மாறி வருகிறது.

ஆகையால் நிறுவனங்கள் இத்தகைய ஓட்டுநர்களை எட்டி அவர்களுக்கு உரிய பரிசோதனை நடைமுறைகளை ஒருமுகப்படுத்துவதற்கு அதிக காலம் பிடிக்கும் என்று ஆணையம் தெரிவித்தது.

டாக்கி, வாடகை வாகனம் ஓட்டுவோர் பல்வேறு இடங்களுக்கும் செல்லவேண்டிய தேவை இருக்கிறது என்பதால் அவர்கள் நிறுவன அலுவலகம் சென்று அங்கு முதலாளி மேற்பார்வையுடன் இடம்பெறும் பரிசோதனை களுக்கு உட்பட வேண்டிய தேவை இராது என்றும் ஆணையம் கூறியது.

செல்லுபடியாகக்கூடிய உரிமங்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கையில், 96,690 டாக்சி ஓட்டுநர்களும் 49,375 வாடகைக் கார் ஓட்டுநர்களும் சுயபரிசோதனை ஏற்பாட்டில் இடம்பெறுவர் என்று தெரிகிறது.

பல்கலைக்கழக மாணவர்க்கு இலவச பரிசோதனைக் கருவி

சிங்கப்பூரில் உள்ள பல்கலைக்கழகங்கள், தங்கள் மாணவர்கள் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்வதை எளிதாக்குகின்றன.

நான்கு பல்கலைக்கழகங்கள், தங்கள் வளாகங் களுக்குள் ஏஆர்டி விரைவு பரிசோதனைக் கருவிகளை இயந்திரங்கள் மூலம் கொடுக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவர்களும் ஊழியர்களும் பல்கலைக்கழக நகர், கெண்ட்ரிட்ஜ், புக்கிட் தீமா, ஊட்ரம் பார்க் வளாகங்களில் செயல்படும் குறைந்தபட்சம் 13 இயந்திரங்களில் இருந்து இலவசமாக இரண்டு கருவிகளைப் பெறலாம்.

அதைப் பெற வேண்டுமானால் மாணவர்கள் uNivUS என்ற கைபேசிச் செயலி மூலம் வாராவாரம் ஏஆர்டி பரிசோதனை முடிவுகளைத் தாக்கல் செய்ய வேணடும்.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இரண்டு பரிசோதனை முடிவுகளைத் தாக்கல் செய்து அதைப் பெறலாம். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் நான்கு வார முடிவுகளைத் தெரிவிக்க வேண்டி இருக்கும்.

சிங்கப்பூர் தொழில்நுட்ப வடிவமைப்புப் பல்கலைக்கழகம் இரண்டு இயந்திரங்களை அமைத்துள்ளது. இதன் மாணவர்கள், ஊழியர்களுக்கு எட்டுக் கருவிகள் இலவசமாகக் கிடைக்கும். நவம்பர் 5ஆம் தேதி முதல் கருவிகளை இவர்கள் பெறலாம்.

சிங்கப்பூர் நிர்வாகக் கழகம், அக்டோபர் 20ஆம் தேதி முதல் இந்த வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் இது பற்றி பரிசோதித்து வருகிறது.