ஆப்கன் வீரரின் அதிவேக 100
துபாய்: டி20 உலகக் கோப்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் பாகிஸ்தானின் முகமது ஹபீஸை வீழ்த்தியதன் மூலம் அனைத்துலக இருபது ஓவர் போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இந்தச் சாதனையை எட்ட அவருக்கு 54 இன்னிங்ஸ் மட்டுமே தேவைப்பட்டன. அனைத்துலக இருபது ஓவர் போட்டிகளில் இதுவரை நான்கு வீரர்கள் மட்டுமே 100 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை அடைந்துள்ளனர். இலங்கையின் லசித் மலிங்கா (76 இன்னிங்ஸ்), நியூசிலாந்தின் டிம் சவுதி (82 இன்னிங்ஸ்), பங்ளாதேஷின் ஷகிப் அல் ஹசன் (83 இன்னிங்ஸ்) ஆகியோருடன் தற்போது ரஷித் கானும் (54 இன்னிங்ஸ்) இணைந்துள்ளார்.
ஏழு பந்துகளில் இப்படியோர் அதிசயம்
துபாய்: டி20 ஆட்டத்தில் குறைந்த பந்துகளை எதிர்கொண்டு ஆட்ட நாயகன் விருது வென்ற வீரர் என்கிற புதிய சாதனையைப் படைத்து உள்ளார் பாகிஸ்தானின் ஆசிஃப் அலி. 7 பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதை வென்றார் இவர். இதற்கு முன்பு இந்தியாவின் தினேஷ் கார்த்திக், நிடாஹஸ் கிண்ணப் போட்டி இறுதிச் சுற்றில் பங்ளாதேஷூக்கு எதிராக 8 பந்துகளில் 29 ஓட்டங்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். அவருடைய சாதனையை தற்போது ஆசிஃப் அலி முறியடித்துள்ளார்.
அரைஇறுதிக்கு முன்னேறிய சிந்து
பாரிஸ்: பிரெஞ்ச் பொதுவிருது பேட்மிண்டன் போட்டி பாரிஸ் நகரில் நடை பெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிக் கிழமை இரவு நடந்த காலிறுதி ஆட்டத்தில் உலக வெற்றியாளரான இந்தியாவின் பி.வி.சிந்து தாய்லாந்தின் பூசனனை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-14, 21-14 எனும் நேர் செட்களில் பூசனனை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். முன்னதாக, ஆண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் லக்ஷயா சென் 17-21, 15-21 என்னும் நேர் செட்களில் தென் கொரியாவின் ஹூயோ குவாங்கியிடம் தோல்வியைத் தழுவினார்.
100 ஓட்டம், 10 விக்கெட்: சரிந்தது சாதனை
சிட்னி: முதுபெரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் பிரபலம் ஆலன் டேவிட்சன் அவரது 92 வயதில் காலமாகிவிட்டதாக நேற்றுக் காலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் மன்றம் அறிவித்தது. 1953 முதல் 1963 வரை டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய இவர், ஒரே டெஸ்ட்டில் 100 ஓட்டங்களை எடுத்து 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்தார்.

