பெல்ஃபாஸ்ட்: யூரோ 2020 கிண்ணத்தை வென்று அசத்திய இத்தாலியின் தேசியக் காற்பந்து அணி உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றில் எதிர்பாரா விதமாகத் தடுமாறியுள்ளது. சி பிரிவில் முதலிடத்தைப் பிடித்து அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவ்வணி அண்மையில் சிக்கல்களைச் சந்தித்து வருகிறது.
சி பிரிவில் முதலிடத்தைப் பிடிக்க வடஅயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இத்தாலி நான்கு கோல்கள் போடவேண்டியிருந்தது. ஆனால் ஆட்டம் கோலின்றி சமநிலையில் முடிந்தது. சாதாரண அணிகளும் எளிதில் ெவல்லக்கூடிய வட அயர்லாந்திடம் உலகின் ஆகப் பிரபலமான அணிகளில் ஒன்றான இத்தாலி கோட்டை விட்டது ஆச்சரியம் தரும் ஒன்று.
தனது பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்ததால் இனி இத்தாலி 'பிளேஆஃப்' தகுதிச் சுற்றுக்குச் செல்லும். அதை வென்றால்தான் உலகக் கிண்ணப் போட்டிக்குக்கு தகுதிபெறமுடியும். சென்ற உலகக் கிண்ணப் போட்டிக்கான 'பிளேஆஃப்' சுற்றில் இத்தாலி தோல்வியடைந்தது. அதனால் 60 ஆண்டுகளில் முதன்முறையாக உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதிபெறத் தவறியது. உலகக் கிண்ணத்தை நான்கு முறை வென்றுள்ள இத்தாலிக்குத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இவ்வாறு நிகழ்வது என்பது நினைத்துப் பார்க்கமுடியாத ஒன்று. 'பிளேஆஃப்' சுற்று வரும் மார்ச் மாதம் நடைபெறும்.
"மார்ச் மாதம் நாங்கள் உலகக் கிண்ணத்திற்குத் தகுதிபெறுவதோடு கிண்ணத்தைக் கைப்பற்றவும் செய்யலாம். எனக்கு முழு நம்பிக்கை உள்ளது," என்றார் சென்ற உலகக் கிண்ணப் போட்டிக்குப் பிறகு களை இழந்த இத்தாலிக்குப் புத்துயிர் ஊட்டியிருக்கும் அதன் பயிற்றுவிப்பாளர் ரொபர்ட்டோ மன்சினி. "ஆட்டங்களில் சிறப்பாக ஆடியபோதும் நாங்கள் கோலடிக்க சிரமப்படுகிறோம். இன்றைய ஆட்டத்தில் தொடக்கத்திலேயே நாங்கள் கோல் போட்டிருக்கவேண்டும். வருத்தம் தருவது என்னவென்றால் இப்பிரிவில் முன்னதாகவே நாங்கள் நிலைமையைச் சீராக்கியிருக்கவேண்டும்," என்றும் மன்சினி குறிப்பிட்டார்.
எதிர்பார்ப்புகளை முறியடித்துத் துடிப்புடன் விளையாடி 53 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு யூரோ கிண்ணத்தை வென்ற இத்தாலி, அவ்வெற்றிக்குப் பிறகு சற்று மெத்தனமாக இருந்துவிட்டது.

