வரலாறு படைத்த சிங்கை உருட்டுப்பந்து வீரர்கள்
சிங்கப்பூர்: வரலாற்றில் முதன்முறையாக சிங்கப்பூரின் ஆண் உருட்டுப்பந்து வீரர்கள் குழு உலக உருட்டுப்பந்து போட்டியில் வெள்ளிப் பதக்கத்தைக் வென்றுள்ளது. இறுதிச் சுற்றை வென்று தங்கத்தைக் கைப்பற்றியது தென்கொரியா.
சியா ரே ஹான், ஜொனொவன் நியோ, டேரன் ஓங், ஜொமொண்ட் சியா ஆகியோரைக் கொண்ட அணி, இப்போட்டியின் வரலாற்றில் முதன்முறையாக இறுதிச் சுற்றுக்குச் சென்ற சிங்கப்பூர் ஆண்கள் குழு. 196-136 எனும் ஆட்டக்கணக்கில் தோல்வியுற்றாலும் இக்குழு வென்ற வெள்ளிப் பதக்கம் சிங்கப்பூருக்குப் பெருமை தந்துள்ள ஒன்று. துபாயில் நடைபெற்ற போட்டியின் அரையிறுதிச் சுற்றில் பிலிப்பீன்சை வென்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது சிங்கப்பூரின் ஆண்கள் குழு.
சபாலெங்கா எதிர்பாரா தோல்வி
குவாடாலஜாரா (மெக்சிகோ): பிஎன்பி பரிபா 'டபிள்யூடிஏ' பெண்கள் பொதுவிருது ஒற்றையர் டென்னிஸ் போட்டியிலிருந்து நட்சத்திரம் அரீனா சபாலெங்கா எதிர்பாரா விதமாகத் தோல்வியடைந்துள்ளார். அவர் கிரீஸைச் சேர்ந்த மரியா சக்காரியிடம் 7-6(7-1), 6-7(6/8), 6-3 எனும் ஆட்டக்கணக்கில் தோல்வியுற்றார்.
அரையிறுதிச் சுற்றில் எஸ்டோனியாவின் அனெட் கொன்டவீட்டை சந்திக்கவுள்ளார் சக்காரி. மற்றோர் அரையிறுதியாட்டத்தில் ஸ்பெயினின் பாவ்லா படோசா தனது சக நாட்டவரான கார்பீன் முகுருசாவைச் சந்திக்கவிருந்தார்.
புகார் தரவுள்ள தென்னாப்பிரிக்கா
ஜொஹனிஸ்பர்க்: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்பை இழந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி ஆட்ட நடுவர் மீது அதிகாரபூர்வமாகப் புகார் கொடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கானாவிற்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியுற்றதால் தென்னாப்பிரிக்கா உலகக் கிண்ண வாய்ப்பை இழந்தது.
அவ்வாட்டத்தை கானா 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது. பெனால்டி வாய்ப்பை கோலாக்கியது கானா. அந்த பெனால்டியை நடுவர் தவறாக வழங்கினார் என்பது தென்னப்பிரிக்காவின் வாதம்.

