சன் மரினோ: வரலாற்றில் இடம்பிடித்தவாறு அடுத்த ஆண்டின் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது இங்கிலாந்து. 57 ஆண்டுகளில் முதன்முறையாக ஓர் ஆட்டத்தில் 10 கோல்களைப் போட்டது இவ்வணி. சன் மரினோவிற்கு எதிராக 10-0 எனும் கோல் கணக்கில் வென்றது.
ஐ பிரிவில் மொத்தம் 39 கோல்களைப் போட்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது இங்கிலாந்து. யூரோ, உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றில் இங்கிலாந்து இத்தனை கோல்களை அடித்தது இதுவே முதல்முறை. "கடந்த சில ஆண்டுகளில் நாங்கள் சில சாதனைகளை முறியடித்துள்ளோம். இது, வெற்றியடைவதற்கான வெறியையும் ஆசையையும் வளர்க்கும். ஆட்டம் முடிவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது அனைவரும் கோல் போட வரிசைகட்டி நின்றனர். இன்று இளம் விளையாட்டாளர்களைக் களமிறக்கியது நல்லதாக இருந்திருக்கலாம்," என்று இங்கிலாந்து பயிற்றுவிப்பாளர் கேரத் சவுத்கேட் குறிப்பிட்டார். சன் மரினோ, அடிக்கடி அதிக கோல்கள் வித்தியாசத்தில் தோல்வியுறும் சிறிய அணி. இருந்தாலும் இங்கிலாந்தின் வெற்றி சாதாரணமல்ல.
"எதிர் அணியின் ஆற்றல் குறித்து எங்களால் ஏதும் செய்யமுடியாது, ஆனால் அணியின் மனப்போக்கும் விளையாட்டாளர்கள் ஆடிய விதமும் அபாரமாக இருந்தன," என்பதைச் சுட்டினார் சவுத்கேட்.

