புவெனொஸ் அய்ரஸ்: பிரேசிலுக்கு எதிரான உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் தகுதிச் சுற்று ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் அணித் தலைவர் லயனல் மெஸ்ஸி விளையாடுவார், ஆனால் காயமுற்ற பிரேசிலின் நேமார் ஆட்டத்தில் இடம்பெறமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு வீரர்களும் பிரான்சின் பிஎஸ்ஜி அணிக்கு விளையாடினாலும் அனைத்துலகக் காற்பந்து என வரும்போது பரம வைரிகள்.
பல ஆண்டுகளாக ஸ்பெயினின் பார்சிலோனாவிற்கு விளையாடிய மெஸ்ஸி இப்பருவத்தில்தான் பிஎஸ்ஜியில் சேர்ந்தார். அதேபோல் சில ஆண்டுகளுக்கு முன் நேமாரும் பார்சிலோனாவிற்கு ஆடினார்.
லத்தீன் அமெரிக்கக் கண்டத்திற்கான தகுதிச் சுற்றுப் பிரிவுப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிரேசிலும் அர்ஜென்டினாவும் வகிக்கின்றன. பட்டியலின் முதல் நான்கு அணிகள் உலகக் கிண்ணத்திற்குத் தகுதிபெறும், ஐந்தாவதாக வரும் அணி 'பிளேஆஃப்' தகுதிச் சுற்றுக்குச் செல்லும். அச்சுற்றில் வெல்லும் அணி பின்னர் உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்னேறும்.
தங்களின் அபார விளையாட்டால் காற்பந்து உலகைத் தன்வசப்படுத்திவந்த பிரேசிலும் அர்ஜென்டினாவும் அண்மைக் காலமாக சற்று சாதாரணமாகத் தென்படுகின்றன. பிரேசிலின் கவர்ச்சியான விளையாட்டு ஒரு காலத்தில் ரசிகர்களை மயக்கும். இப்போதோ அதன் ஆட்டத்தில் பழைய விறுவிறுப்பு இல்லை. அர்ஜென்டினாவின் விளையாட்டிலும் முன்பிருந்த உத்வேகம் இப்போது இல்லை. எனினும், லத்தீன் அமெரிக்க கண்டத்தைப் பொறுத்தவரை இவ்விரண்டும்தான் இன்னமும் ஆகச் சிறந்தவை.

