கொவிட்-19 தொடர்பான கட்டுப்பாடுகளுக்கிடையே எஸ்பிளனேட் கலையரங்கம் இன்றுமுதல் களைகட்ட உள்ளது. கலா உற்சவத்தின் 20வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பலரையும் சுண்டி இழுக்கும் துடிப்பான நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த இந்திய கலைவிழா, இம்மாதம் 28ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. தீபாவளி பண்டிகைக் காலத்தில் நடந்தேறும் இக்கலைவிழா, வெவ்வேறு சமூகங்கள் ஒன்றிணைந்து கொண்டாடும் ஒரு தளத்தை அமைத்துத் தருகிறது.
சிங்கப்பூரர்கள் கலைப் படைப்புகளைப் பார்த்து ரசிப்பதை ஊக்குவிப்பதும் இக்கலைவிழாவின் சமூக நோக்கமாகும். சிங்கப்பூரர், இந்திய கலைஞர்கள் சங்கமித்துத் தங்களின் லட்சியத் திட்டங்களை நிறைவேற்றவும் தனித்துவமான படைப்புகளை இணைந்து உருவாக்கவும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படுகிறது.
கலா உற்சவம் தொடங்கப்பட்டபோது பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக புகழாளர்களின் வருகை நாடப்பட்டது. காலப்போக்கில், புதுவகை படைப்புகளை மேடைஏற்றுவதற்கான ஒரு சோதனைக் களமாக இக்கலைவிழா மாறியது. கலையுலகம் எல்லையற்றது என்பதை உணர்த்தவும் அரிய, மறைந்துவரும் நாட்டுப்புறக் கலைவடிவங்களுக்கு உயிரூட்டவும் கலா உத்சவம் முயன்று வருகிறது.
இந்திய தூதரகத்தின் ஆதரவுடன் நடைபெறும் இவ்வாண்டின் கலைவிழாவில் பலதரப்பட்ட, பரவசப்படுத்தும் புத்தாக்க முயற்சிகளைக் காண முடியும்.
கலைவிழாவின் ஓர் அங்கமாக 'ரஃப்பி 50 - ஏ மியூசிக்கல் ஜூபிலி' இசைநிகழ்ச்சி இடம்பெறுகிறது. சிங்கப்பூரின் மூத்த கலைஞர் முகம்மது ரஃபியின் 50 ஆண்டு இசையமைப்புப் பயணத்தைக் கொண்டாடும் ஒரு நிகழ்ச்சி இது.
"அனைத்துலக ரசனை கொண்ட இசைநிகழ்ச்சியாக இது இருக்கும். வெவ்வேறு பாணி இசை இதில் ஒலிக்கும்," என்று தப்லா நாளிதழிடம் ரஃபி தெரிவித்தார்.
தென்னிந்திய, வட இந்திய இசையமைப்பையும் பாடல் வரிகளையும் கொண்ட கலவையாக இசைநிகழ்ச்சி அமையும் என்று குறிப்பிட்ட அவர், இதில் 15 தமிழ்ப் பாடல்களும் இரண்டு ஹிந்தி பாடல்களும் இருக்கும் என்றார்.
நாடக ஆசிரியர் கிரேஸ் கலைச்செல்வியின் 'மர்ம மேடை-தீர்ப்பு' என்ற நாடகமும் கலா உற்சவத்தில் இடம்பெறுகிறது. வானொலியில் ஒலிபரப்பான எம்.கே.நாராயணனின் 'மர்ம மேடை' தொடர் நாடகத்தின் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டது இந்த 'மர்ம மேடை-தீர்ப்பு'.
எஸ்பிளனேட் கலையரங்க அறையில் 90 நிமிடக் கதையில் ஐந்து வானொலி நாடகப் படைப்புகளுடன் இது மேடையேற உள்ளது. ஒவ்வொரு நாடகப் படைப்பும் 30 நிமிடத்திற்கு நீடிக்கும்.
"அசைவுகள், ஒளி ஒலி அமைப்பு, உடனே பொருள் புலப்படாத காட்சிகள் ஆகியவற்றை அதிகமாகப் பயன்படுத்தி ஒவ்வொரு கதையையும் வெவ்வேறு விதமாக வெளிப்படுத்துகிறது இந்த நாடகம்," என்றார் திருவாட்டி கலைச்செல்வி.
ஒரே சமயத்தில் பல சம்பவங்கள் நடப்பது போன்று காட்டப்படுவதால் பார்வையாளர்கள் நிச்சயம் தங்களின் இருக்கையைவிட்டு அகலாமல் இருப்பர் என்றும் அவர் குறிப்பிட்டார். இம்மாதம் 26, 27, 28 தேதிகளில் 'மர்ம மேடை-தீர்ப்பு' நாடகம் அரங்கேறுகிறது.
கலா உற்சவக் கலைவிழாவில் கேசவன் சகோதரிகளின் 'கானல்வரியும் காரிகை நிலையும்-மாதவியின் கதை' என்ற பரதநாட்டியப் படைப்பும் இடம்பெறுகிறது.
பார்வையாளர்களை மீண்டும் கடந்த காலத்திற்குக் கொண்டு சென்று சிலப்பதிகாரத்தின் மாதவி கதையை அறிந்திடும் வாய்ப்பை இப்படைப்பு தருகிறது. இம்மாதம் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை அரங்கேறும் இந்த நாட்டிய நாடகத்தில் மயிலாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற வெவ்வேறு நாட்டுப்புற பாணி நடனங்கள் இணைகின்றன.
"தமிழ் இலக்கியப் படைப்புகளில் முக்கிய அங்கம் வகிக்கும் மாதவியின் கதை, பெரிதாகப் பேசப்படுவதில்லை," என்றார் பரதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் கலை இயக்குநர் திருவாட்டி ஜெயந்தி கேசவன்.
மாதவி தம் மகள் மணிமேகலையுடன் பேசும் உரையாடல்கள்வழி மாதவியின் வளர்ச்சியையும் உணர்வுகளையும் நாட்டிய நாடகம் வெளிச்சம் போட்டு காட்டும் என்றார் அவர்.
சிங்கப்பூர் இந்திய இசைக்குழு, பாடகர் குழு (என்ஐஒசி) படைக்கும் 'ஆத்ம கானம்', இம்மாதம் 28ஆம் தேதியன்று எஸ்பிளனேட் நிகழ்ச்சி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 'எஸ்ஐஓசி'யின் 36வது ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் இந்த 2 மணிநேர நிகழ்ச்சியில் தாளம், மெல்லிசை, பண்ணிசை ஒருசேர அமைந்து கேட்போரை லயிக்கச் செய்யும் என்றார் என்ஐஓசியின் நிறுவனரும் நடத்துநருமான திருவாட்டி லலிதா வைத்தியநாதன்.
"இந்திய பாரம்பரிய ராகங்கள் முதல் சமகால இசை வரை பல நாட்டு இசையமைப்பை மனதைக் கொள்ளை கொள்ளும் காட்சியமைப்புடன் வழங்கும் இந்தப் படைப்பு," என்றார் அவர்.
கலா உற்சவக் கலைவிழாவில் 'மெட்டல்' இசை வாசிக்கும் 'ருத்ரா'வின் படைப்பு இம்மாதம் 27ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. 29 ஆண்டுகளாக வெளிவந்த எட்டு ஆல்பங்களிலிருந்து திரட்டப்பட்ட பாடல் இசைத்தொகுப்பை ருத்ரா இசைக்குழு வாசிக்கும்.
இசையுடன் பூமி அன்னையைக் கொண்டாடும் 'பூமி பிராணம்', இம்மாதம் 20, 21 தேதிகளில் எஸ்பிளனேட் நிகழ்ச்சி மண்டபத்தில் அரங்கேறும். இதை வழங்குவோர் டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்.
நிகழ்ச்சிகள் குறித்தும் நுழைவுச்சீட்டு விவரம் குறித்தும் அறிய www.esplanade.com/kalaautsavam இணையப்பக்கத்தை நாடலாம்.

