மலர்க்கொத்து பெறுவதைப் பெண்கள் பலரும் விரும்புவர். அன்பர் தினம், திருமணம், பிறந்தநாள் எனக் கொண்டாட்டம் நடக்கும் இடங்களில் பூக்களையும் பூவையரையும் பிரிக்க முடியாது.
பழங்காலத்து கிரேக்கர்கள், ரோமானியர்கள், எகிப்தியர்கள் திருமணங்களின்போது வாசனை மிகுந்த மூலிகைகளைத் தங்களின் கைகளில் ஏந்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. தீயதை விரட்டும் நோக்கில் அவர்கள் இந்த வழக்கத்தைப் பின்பற்றினர்.
விசுவாசம், மகிழ்ச்சி, பிள்ளைப்பேறு போன்றவற்றில் நம்பிக்கை கொண்டு ஒரு புதிய துவக்கத்தைக் குறிக்கவும் பூக்கள் பயன்படுத்தப்பட்டன. பின்னர் விக்டோரியா காலகட்டத்திற்குப் பின்னரே இன்று நாம் காணும் திருமண மலர்க்கொத்து வழக்கம் வந்தது என அறியப்படுகிறது.
இன்று வாடிக்கையாளர் விருப்பத்திற்கு ஏற்ப மலர்க்கொத்தை வடிவமைக்கும் சூழல் வந்துவிட்டது. சிங்கப்பூரில் பகுதிநேரமாக மலர்க்கொத்து உட்பட அன்பளிப்புப் பொட்டலம், பூச்செண்டு, பெயர் பொறிக்கப்பட்ட பரிசுப்பொருள் போன்றவற்றைத் தயாரிக்கும் திருவாட்டி பிரசிலா திஷா பிரதீப், 28, தமது கருத்துகளைத் தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டார்.
புதிதாகத் தொடங்கியுள்ள தமது மலர்க்கொத்து தயாரிக்கும் வர்த்தகத்திற்குத் தம்முடைய தந்தையின் அச்சுப் பதிப்பகம் பெரிதும் கைகொடுத்ததாக அவர் கூறினார்.
இதனால் வாடிக்கையாளர்களுக்குப் பிரத்தியேகமாக தயாரித்துத் தரும் சேவையையும் வழங்க முடிவதாகக் கூறினார்.
பூக்களை அழகாக வைக்கும்போது தம் தாயாருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியையும் மன அமைதியையும் தாம் கண்ணாரக் கண்ட பிறகு இதை ஒரு வியாபாரமாகவும் தமக்குப் பிடித்த பொழுதுபோக்காகவும் தொடங்கியதாகக் கூறினார்.
இதன் தொடர்பில் பயிற்சி வகுப்புக்குச் சென்ற பிரசிலா, சிறு மலர்க்கொத்து தயாரிப்பதிலும் பல்வேறு உத்திகள் அடங்கி உள்ளதாகக் கூறினார்.
தம்மை நாடி வருவோர் அல்லி, சூரியகாந்தி, நீலம், கறுப்பு, வண்ணமயமான ரோஜாக்கள் ஆகியவற்றைக் கேட்பதாகக் குறிப்பிட்ட அவர், வாடிக்கையாளர்கள் விருப்பம் மாறிக்கொண்டே வருவதாகச் சொன்னார்.
சமூக ஊடகங்கள் வழி இவர் தமது வர்த்தகத்தை விளம்பரப்படுத்திக்கொள்ளும் அதேவேளை, அதற்கான விமர்சனங்களை அறிந்துகொண்டு தமது திறமையை மேலும் வளர்த்துக்கொள்வதில் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
கூடுதல் செய்தி:
கி.ஜனார்த்தனன்

