மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை கொஞ்சம் குறைந்து இருக்கிறது.
தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையும் முன்பைவிட குறைவாக இருக்கிறது. இவற்றின் விளைவாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கொஞ்சம் அதிக சுதந்திரத்துடன் தங்களுக்கு இடையே கலந்துறவாடுவதற்கான வாய்ப்பு விரைவில் ஏற்படக்கூடிய நிலை உருவாகி வருகிறது என்று வல்லுநர்கள் கருத்து கூறி இருக்கிறார்கள்.
இருந்தாலும்கூட தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மக்கள் தொடர்ந்து கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடந்துகொள்ள வேண்டிய வாய்ப்பு இருப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். இம்மாதம் 18ஆம் தேதி வியாழக்கிழமையன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 1,435 ஆக இருந்தது.
தீவிர சிகிச்சை பிரிவில் 60 நோயாளிகள் செயற்கை சுவாசக் கருவிகளுடன் சிகிச்சை பெற்றனர். 53 பேர் அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டனர்.
தீவிர சிகிச்சை பிரிவின் ஒட்டுமொத்த பயனீட்டு விகிதம் நவம்பர் 18ஆம் தேதி 58.5% ஆக இருந்தது. இது அதற்கு ஒரு நாள் முன்பு 62.6% ஆக இருந்தது. இந்த மாத தொடக்கத்தில் இந்த அளவு 67.1% ஆக இருந்தது. அக்டோபர் 25ஆம் தேதி தீவிர சிகிச்சை பிரிவின் பயனீட்டு விகிதம் 83.6% என்பது குறிப்பிடத்தக்கது.
படுக்கைகளின் எண்ணிக்கை நவம்பர் 16ஆம் தேதி 430 ஆக அதிகரித்தது. இது அக்டோபர் முடிவில் ஏறத்தாழ 360 ஆக இருந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகள் குறைவுக்கு இதுவும் காரணமாக இருக்கலாம்.
சுகாதாரப் பராமரிப்பு முறைக்குச் சுமை குறைவதால் கட்டுப்பாடுகள் அகலும் வேகம் சூடுபிடிக்கிறது என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய் பிரிவு பேராசிரியர் டேல் ஃபிஷர் கூறினார்.
முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான விதிமுறைகளைத் தளர்த்தலாம் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக சோ சுவீ ஹோக் பொதுச் சுகாதாரப் பள்ளியின் துறைத் தலைவர் பேராசிரியர் டியோ யிக் யிங் குறிப்பிட்டார்.
முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐவர் சேர்ந்து வெளியே சாப்பிட சிங்கப்பூர் அனுமதிக்கலாம் என்று தான் கருதுவதாக அவர் தெரிவித்தார். விதிமுறைகள் தளர்த்தப்பட்டால் அது முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே உரியவையாக இருக்கவேண்டும் என்று பேராசிரியர் டியோ வலியுறுத்திக் கூறினார்.

