புதிதாக 2,038 பேருக்குத் தொற்று
சிங்கப்பூரில் வியாழக்கிழமை புதிதாக 2,038 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களையும் சேர்த்து கொரோனா கிருமி தொற்றியோரின் மொத்த எண்ணிக்கை 246,853 ஆகியது.
வாராந்திர தொற்று அதிகரிப்பு விகிதம் புதன்கிழமை 0.89 ஆக இருந்தது. இது 0.90 ஆகக் கூடியது. கொரோனா காரணமாக ஆறு பேர் மரணமடைந்தனர். அவர்களுக்கு வயது 57 முதல் 84 வரை. மாண்டவர்களில் அனைவருக்கும் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன. கொவிட்-19 மொத்த மரண எண்ணிக்கை 625 ஆகி உள்ளது.
புதிதாக கிருமி தொற்றியோரில் 1,964 பேர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 294 பேருக்கு வயது 60 மற்றும் அதற்கும் அதிகம். வெளிநாட்டு ஊழியர் விடுதிகளைச் சேர்ந்தவர்கள் 67 பேர். ஏழு பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று அமைச்சு தெரிவித்தது.
கடந்த இரண்டுவார காலமாக தீவிர சிகிச்சைப் பிரிவு பயனீட்டு அளவு குறைந்து வருகிறது. வியாழக்கிழமை இந்த அளவு 58.8% ஆக இருந்தது. புதன்கிழமை இந்த அளவு 62.6% ஆகும்.
உல்லாசக் கப்பல் துறைக்குத் தேவை குறையவில்லை
தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்காக பல நாடுகளுடன் பயண ஏற்பாடுகளை சிங்கப்பூர் நடைமுறைப்படுத்தி வருகிறது.
இருந்தாலும்கூட உல்லாசக் கப்பல் பயணங்களை மக்கள் நாடுவது குறையவில்லை. தன் நிறுவனம் இயக்கும் உல்லாசப் பயணக் கப்பல்களில் இந்த ஆண்டு முழுவதற்குமான முன்பதிவுகள் நிரம்பிவிட்டதாக ராயல் கரீபியன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ஆசிய பசிஃபிக் துணைத் துலைவரும் நிர்வாக இயக்குநருமான திருவாட்டி ஏஞ்சி ஸ்டீபன் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டுக்கும் தேவை அதிகமாக இருக்கிறது என்று அவர் கூறினார். சிங்கப்பூரில் உல்லாசக் கப்பல் சேவை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ள மற்றொரு நிறுவனம் டிரீம் குருஸ். இதை ஜெண்டிங் குருஸ் லைன்ஸ் நிறுவனம் நடத்துகிறது.
நாணய ஆணைய இயக்குநர் சபைக்குப் புதிய உறுப்பினர்கள்
சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் இயக்குநர் சபைக்கு திரு ஆல்வின் டான் ஷென் ஹுய், திரு இங் வாய் கிங் இருவரும் நியமிக்கப்பட்டு இருப்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
அவர்களின் நியமனம் இம்மாதம் 22ஆம் தேதி முதல் 2023 மே 31ஆம் தேதிவரை செல்லுபடியாகும்.
திரு டான் ஷென் ஹுய் வர்த்தக தொழில் மற்றும் கலாசார, சமுக இளையர் துறை துணை அமைச்சராவார்.
திரு இங், வோங்பார்ட்டர்ஷிப் நிறுவனத்தின் நிர்வாக பங்காளி ஆவார். இவர் இதர பல அமைப்புகளில் வகிக்கும் பொறுப்புகளுடன், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் அறங்காவலர்கள் சபை உறுப்பினராகவும் இருக்கிறார் என்று ஆணையம் தெரிவித்தது.

